தமிழ்நாடு

மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு! ஏன்? அதிர்ச்சி காரணம்

webteam

இன்புளுயன்சயா காய்ச்சல் பாதிப்பால் மதுரை அரசு மருத்துவமனையில் வழக்கத்தை விட அதிகமாக வெளிநோயாளிகள் சிகிச்சைக்கு வருவதாக அரசு இராஜாஜி மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலை தொடர்ந்து தற்போது மக்களை இன்புளுயன்சா காய்ச்சல் அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் இன்புளுயன்சா வைரஸ் பரவி வரும் நிலையில், மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பாக முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த காய்ச்சல் நான்கு நாட்கள் வரை பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில், வெளி நோயாளிகள் மற்றும் காய்ச்சல் பிரிவில் பரிசோதனை மேற்கொள்ள பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், சாதாரண நாட்களில் 250 பேர் வரை காய்ச்சல் மற்றும் சளி உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக சிகிச்சை எடுத்துக் கொள்ள அங்கு வருகின்றனர் என சொல்லப்படுகிறது. இதையடுத்து கடந்த சில நாட்களாக 300-க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள், காய்ச்சல் காரணமாக சிகிச்சை மற்றும் பரிசோதனைக்கு வந்து செல்வதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கிட்டத்தட்ட 50 முதல் 70 பேர் வரை கூடுதலாக சிகிச்சைக்கு வருவதாகவும், தொடர் காய்ச்சல், சளி, நெஞ்சுடைப்பு, மூச்சு விடுதலில் கடும் சிரமம் உள்ளிட்ட பிரச்னைகள் இருந்தால் மட்டுமே இன்புளுன்யசா பரிசோதனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல குழந்தைகள் சிகிச்சைப் பிரிவிலும் காய்ச்சல் மற்றும் சளி பிரச்னையால் குழந்தைகள் அதிகளவில் சிகிச்சைக்கு வருவதாகவும், சாதாரண காய்ச்சல் காரணமாக 3 - 4 நாட்களில் அவர்கள் குணமடைந்து வீடு திரும்பி விடுவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் நலப்பிரிவில் நாள்தோறும் 20 முதல் 25 குழந்தைகள் காய்ச்சலால் அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.