புகார் மனு அளித்த விவசாயிகள்  pt desk
தமிழ்நாடு

நுரைபொங்க ஓடும் நீர் | தோல் தொழிற்சாலை கழிவுநீர் கலந்ததால் பாலாற்றில் TDS அளவு உயர்வு

பாலாற்றில் மீண்டும் திறந்து விடப்பட்ட தோல் தொழிற்சாலை கழிவுநீர், பாலாற்றில் TDS அளவு 1400 உள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்

தமிழக - ஆந்திர எல்லைப் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக பாலாற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்து வருகிறது. இதனால் வாணியம்பாடியில் உள்ள தோல் தொழிற்சாலை நிர்வாகத்தினர், தோல் கழிவுநீரை பாலாற்றில் திறந்து விட்டுள்ளனர். இதையடுத்து ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு பகுதியில் உள்ள பாலாற்றில் இன்று மீண்டும் பாலாறு நுரைப்பொங்கி ஓடுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

நுரைபொங்க ஓடும் பாலாறு

இந்நிலையில், இன்று மாராப்பட்டு பாலாற்று நீரை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர், அப்பொழுது பாலாற்று நீரின் TDS அளவு 1400 ஆக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர், ஏற்கனவே கடந்த ஞாயிற்றுக்கிழமை பாலாற்றில் நுரைப்பொங்கி ஓடிய போது, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது நீரின் TDS அளவு 1200 ஆக இருந்ததாகவும், இன்று 1400 ஆக இருக்கிறது. இந்த அளவு குடிக்க கூட முடியாத அளவு என இயற்கை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதைத் தொடர்ந்து வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில், பாலாற்றில் தோல் தொழிற்சாலை கழிவுநீர் வெளியேற்றுவது குறித்து அடுக்கடுக்காக அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பி புகார் மனு அளித்தனர்.