தமிழ்நாடு

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு ! புள்ளி விவரம் சொல்லும் உண்மை

webteam

சென்னையில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில். அண்மையில் வெளியான தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் புள்ளி விவரத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பது தெளிவாகிறது.

2016-ம் ஆண்டு நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக 3 லட்சத்து 38 ஆயிரத்து 954 குற்றங்கள் நடந்துள்ளதாக கூறுகிறது என்.சி.ஆர்.பி. எனப்படும் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கை. இது 2015-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2.9 சதவிகிதம் அதிகம் என்பது மற்றொரு அதிர்ச்சி தகவல். இந்தியாவில் ஒரு மணி நேரத்தில் 4 பாலியல் குற்றங்கள் நடப்பதாக என்.சி.ஆர்.பி. புள்ளிவிவரம் கூறுகிறது. 2016-ல் ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 165 பாலியல் வன்கொடுமை வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு உள்ளன. பெருநகரங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பாலியல் வழக்குகள் மட்டும் 15 ஆயிரத்து 540. பெரும்பாலான வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தெரிந்தவர் தான் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார். 

2015-ம் ஆண்டு முடிவில் நாடு முழுவதும் 10 லட்சத்து 80 ஆயிரத்து 144 பெண்களுக்கு எதிரான வழக்குகள் நிலுவையில் உள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் மேற்குவங்கம், மூன்றாவது இடத்தில் மராட்டியம், நான்காவது இடத்தில் ராஜஸ்தான், ஐந்தாவது இடத்தில் மத்தியப்பிரதேசம் ஆகியவை உள்ளன. இந்த வரிசையில் தமிழ்நாடு 19-வது இடத்தில் உள்ளது. 2016-ம் ஆண்டில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக 4 ஆயிரத்து 463 குற்றங்கள் நடந்து உள்ளன. நாட்டிலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்த அளவில் நடக்கும் மாநிலமாக சிக்கிம் உள்ளது. 2015-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 2016-ல் 13.6 சதவிகிதம் அதிகரித்துள்ளது.