சென்னையில் உள்ள ஜெயா டிவி அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரியினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் ஜெயா டிவி அலுவலகம் உள்ளது. இங்கு அதிகாலையிலிருந்து வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தாம்பரத்தில் இருந்து வந்துள்ள 10 பேர் கொண்ட வருமான வரித்துறை குழு இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளது. வருமான வரித்துறையினரின் சோதனையை ஜெயா டிவி நிறுவனமும் உறுதி செய்துள்ளது. ஜெயா தொலைக்காட்சியுடன் தொடர்புடைய மற்ற இடங்களிலும் சோதனை நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
வருமானம் குறித்து முறையான தகவல் தெரிவிக்கப்படவில்லை என்பதால் இந்த சோதனை நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன. மொத்தமாக எத்தனை இடங்களில் இந்த சோதனை நடைபெறுகிறது. சோதனைக்கான காரணம் என்ன என்பது குறித்த விவரங்கள் சோதனையின் முடிவுக்கு பிறகே தெரிய வரும். பெங்களூரு சிறையில் சசிகலாவை டிடிவி தினகரன் நேற்று சந்தித்த நிலையில் இன்று இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இருப்பினும் இந்த சந்திப்புக்கும், வருமான வரி சோதனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறப்படுகிறது.