திமுக பிரமுகரும், ஆற்காடு தொழிலதிபருமான ஏ.வி. சாரதி வீடு மற்றும் கல்குவாரியில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக வர்த்தகர் அணி செயலாளராக இருந்தவர் ஏவி சாரதி. நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் ஏற்காடு தொகுதியில் அவருக்கு, அதிமுக சார்பில் சீட் வழங்காத ஆத்திரத்தில், அக்கட்சியில் இருந்து விலகி, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சில பேரூராட்சிகள் ஒதுக்கப்பட்டு தேர்தல் பொறுப்பாளராக திமுக சார்பில் நியமிக்கப்பட்டிருந்த சாரதி, ஆற்காடு அடுத்த ஆனைமல்லூரில் கல்குவாரி மற்றும் பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார். இந்நிலையில் மத்திய அரசின் வருமான வரித்துறை அதிகாரிகள் 10 பேர் கொண்ட குழுவினர், இன்று காலை திடீரென சாரதியின் அலுவலகம், வீடு, கல்குவாரி என அவருக்கு சொந்தமான 25-க்கும் மேற்பட்ட இடங்களில் தலா 3 பேர் வீதம் சோதனை நடத்தி வருகின்றனர்.
திமுகவில் இணைந்த நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதியம் 12 மணி வரை நடந்து வரும் சோதனையில் எந்தவிதமான ஆடைகள் தற்போது வரை கைப்பற்றப் படவில்லை என கூறப்படுகிறது.