தமிழ்நாடு

ஓ.பன்னீர்செல்வம் அலுவலகம் அருகே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை!

JustinDurai

 போடியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அலுவலகம் அருகே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.    

தமிழகத்தில் வருகிற 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில், அரசியல் கட்சியினர் மக்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் ஆணையத்தினர் பறக்கும் படைகள் அமைத்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல வருமான வரித்துறையினரும் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு, மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை, கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, அமைச்சர் எம்.சி.சம்பத் உள்ளிட்டோர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், தேனி மாவட்டம் போடியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அலுவலகம் அருகே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அதிமுகவைச் சேர்ந்த தேனி மாவட்ட ஜெ. பேரவை பொருளாளர் குறிஞ்சி மணி வீட்டில் ரெய்டு நடைபெற்று வருகிறது.