தமிழ்நாடு

5 கிலோ தங்கம், கணக்கில் வராத ரூ.120 கோடிக்கான முதலீடு: பால் தினகரனுக்கு சம்மன்

webteam

மத போதகர் பால் தினகரனுக்கு வருமான வரித்துறை சார்பில் சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. காருண்யா பல்கலைக்கழகத்தில் 5 கிலோ தங்கம், ரூ.120 கோடிக்கான கணக்கில் வராத முதலீடுகள் ஆகியவற்றை கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்

கோவை காருண்யா பல்கலைக்கழகம் உட்பட பால் தினகரனுக்கு சொந்தமான 10 இடங்களில் கடந்த 3 நாட்கள் இரவு, பகலாக வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், கோவையில் உள்ள அனைத்து இடங்களிலும் வருமான வரி சோதனை நேற்று இரவோடு முடிவடைந்துள்ளது. பிற இடங்களிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை காருண்யா பல்கலைக்கழகத்தில் ஒருசேரக் கொண்டுவரப்பட்டு ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் காருண்யா பல்கலைக்கழகத்தில் உள்ள விருந்தினர் விடுதியில் 5 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் 3 நாள் சோதனையில் ரூ.120 கோடி அளவிற்கு கணக்கில் காட்டப்படாத முதலீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதனையடுத்து மத போதகர் பால் தினகரனுக்கு வருமான வரித்துறை சார்பில் சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளிநாட்டில் இருப்பதாக கூறப்படும் நிலையில், பால் தினகரன் அடுத்த வாரம் சென்னையில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மனில் வருமான வரித்துறை குறிப்பிட்டுள்ளது.