தமிழ்நாடு

இளவரசி குடும்பத்திடம் தீவிர விசாரணை

இளவரசி குடும்பத்திடம் தீவிர விசாரணை

webteam

இளவரசியின் குடும்பத்தினர் கிருஷ்ணப்ரியா, ஷகிலா உள்பட 6 பேரிடம் வருமானவரித்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

கிருஷ்ணப்பிரியா இயக்குநராக இருக்கும் நிறுவனங்கள், ஷகிலாவிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் 5 நாட்கள் சோதனை நடத்தி பல ஆவணங்களை கைப்பற்றினர். இதுதொடர்பாக வருமானவரித்துறையினர் அவர்களுக்கு சம்மன் அளித்தனர். இதன்பேரில் சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் வருமானவரித்துறை அலுவலகத்தில் கிருஷ்ணப்ரியா தனது கணவருடன் ஆஜரானார். அதேபோல் ஷகிலாவும் தனது கணவருடன் ஆஜரானார்.

கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்டவை குறித்து அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடைபெற்றது. கிருஷ்ணப்ரியாவிற்கும் போலி நிறுவனங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. திவாகரனின் மகளுடன் சேர்ந்து ஷகிலா, வெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்தது தொடர்பாக வருமானவரித்துறையினர் கேள்வி எழுப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராகிய கிருஷ்ணப்ரியாவின் கணவர் கார்த்திகேயனிடம் அதுதொடர்பாக விசாரணை நடைபெற்றது. இதேபோல் விவேக் நிர்வகித்து வரும் ஜெயா டிவியின் பொதுமேலாளாளர் நடராஜன், டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தியிடமும் வருமானவரித்துறையினர் ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளனர்.