தமிழ்நாடு

சாமியார் கல்கிக்கு சொந்தமான சொத்துகள் முடக்கம் - வருமான வரித்துறை நடவடிக்கை

webteam

சாமியார் கல்கிக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள 907 ஏக்கர் நிலத்தை வருமான வரித்துறை முடக்கியுள்ளது.

வரி ஏய்ப்பு புகார் எழுந்ததை அடுத்து கடந்த அக்டோபர் மாதம் சாமியார் கல்கிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அதில் 44 கோடி ரூபாய் ரொக்கம், 90 கிலோ தங்கம், 20 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் மற்றும் கணக்கில் வராத சொத்து ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் கல்கி ஆசிரமம் 800 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதும் சோதனையில் தெரியவந்தது.

இந்த நிலையில் சாமியார் கல்கி குடும்பத்தினருக்கு சொந்தமான 907 ஏக்கர் நிலத்தை பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் வருமான வரித்துறை முடக்கியுள்ளது. இந்த சொத்துகள் அனைத்தும் ஆசிரமத்தின் நம்பத்தகுந்த பக்தர்கள் மற்றும் அவர்கள் நடத்தி வரும் ஆன்மிக பள்ளிகளின் ஊழியர்கள் பெயரில் வாங்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முடக்கப்பட்ட நிலங்கள் கோவை, உதகை, சத்தியவேடு, பெல்காம் ஆகிய ஊர்களில் இருப்பதாகவும், அதுகுறித்த விவரங்கள் நிலப்பதிவு அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.