தமிழ்நாடு

எம்.எல்.ஏ விடுதி சோதனை - ஆர்.பி.உதயகுமாருக்கு வருமானவரித்துறை சம்மன்

எம்.எல்.ஏ விடுதி சோதனை - ஆர்.பி.உதயகுமாருக்கு வருமானவரித்துறை சம்மன்

webteam

எம்.எல்.ஏ விடுதியில் உள்ள வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறையில் சோதனை நடத்தியது தொடர்பாக வருமானவரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெறவிருக்கும் நிலையில், வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதை தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். பணம் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து, நேற்று இரவு 10 மணியளவில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை நடத்தினர். 

சி பிளாக் பகுதியில் பத்தாவது தளத்தில் உள்ள தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் அறை உள்ளிட்ட 3 அறைகளில் இந்த சோதனை நடைபெற்றது. தேர்தல் பறக்கும் படையினருடன் வருமான வரித்துறை அதிகாரிகளும் இணைந்து சோதனை நடத்தினர். சுமார் 2 மணி நேரம் சோதனை நடத்திய அதிகாரிகள், ஊடகங்களில் எவ்வித தகவலும் தெரிவிக்காமல், வேறு வழியாக சென்றுவிட்டனர். 

இந்நிலையில் ஆர்.பி.உதயகுமார் அறையில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக அவர் விளக்கமளிக்க வருமானவரித்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். அதில், ஆர்.பி.உதயகுமார் அறையில் நடத்திய சோதனையில் சில துண்டு சீட்டுகளும், வெற்றுப் பைகளும் கைப்பற்றப்பட்டதாக தெரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சோதனையின் போது அறையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.கே நகர் இடைத்தேர்தலின் போதும் இதேபோன்று சுகாதாரத்துறை அமைச்சர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதும், அதன்பின்னர் கிடைத்த டைரி மற்றும் துண்டு சீட்டுகள் மூலம் தேர்தலையே ரத்து செய்ததும் குறிப்பிடத்தக்கது.