தமிழ்நாடு

“ரூ.700 கோடி வருவாயை மறைத்த 2 நிறுவனங்கள்” - வருமான வரித்துறை தகவல்

webteam

தமிழகத்தைச் சேர்ந்த ‌மது ஆலை உள்பட இரண்டு நிறுவனங்கள் 700 கோடி ரூபாய் வருவாயை கணக்கில் காட்டாமல் மறைத்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த மது ஆலை ஒன்றுக்கு சொந்தமான இடங்களில் கடந்த 6ஆம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தமிழகத்தில் சென்னை, கோவை மற்றும் தஞ்சையிலும், கேரளா, ஆந்திரா, கோவா ஆகிய மாநிலங்களிலும் மொத்தம் 55 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. குறிப்பிட்ட மது ஆலை கடந்த 6 ஆண்டுகளாக 400 கோடி ரூபாய் வருவாயை கணக்கில் காட்டாமல் மறைத்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. மது தயாரிக்க தேவைப்படும் மூலப் பொருள்கள் மற்றும் பாட்டில்களை அதிகளவில் வாங்கியதாக கணக்குக்காட்டி மோசடி நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பிட்ட ஆலை அதிகளவு பொருள்கள் வாங்கியதாகக்கூறி அதற்கான தொகையை காசோலை மற்றும் ஆன்லைன் பணப்பரிமாற்றம் மூலம் விற்பனையாளர்களுக்கு கொடுத்துவிட்டு, கூடுதல் தொகையை ‌அவர்களிடம் இருந்து பணமாக பெற்றுக் கொண்டதாக வருமானவரித்துறை கூறியுள்ளது. இதே போல் மது விற்பனையில் ஈடுபட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு நிறுவனம் 300 கோடி ரூபாய் வருவாயை கணக்கில் காட்டவில்லை என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. 

அந்நிறுவனத்துக்குச் சொந்தமாக சென்னை மற்றும் காரைக்காலில் உள்ள 7 இடங்களில் 9ஆம் தேதி தொடங்கிய சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் காரில் எடுத்துச் செல்ல முயன்ற 4 கோடியே 50 லட்சம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.