ரஜினி நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக வெளியானது "தர்பார்" திரைப்படம். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இப்படம் வசூல் அளவில் முந்தைய ரஜினி படங்களை போல இல்லை என்றும் படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பான செய்திகளும் அடிக்கடி வெளியே வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இப்போது, ரஜினி வழக்கம்போல தன் அடுத்தப்பட படப்பிடிப்பில் கலந்துக்கொண்டுள்ளார்.
ரஜினி படப்பிடிப்பில் கலந்துக்கொண்டாலும் அவரின் அரசியல் நிலைப்பாடு குறித்த செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணமே இருக்கின்றன. புதிய கட்சி தொடங்க உள்ளதாக கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், ஆன்மிக அரசியல்தான் தனது பாதை என்றும் தெரிவித்து இருந்தார். அறிவிப்பு வெளியிட்டு இரண்டு வருடங்கள் ஆனதாலும், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் வரவுள்ளதாலும் ரஜினி கட்சி ஆரம்பிப்பது குறித்த செய்திகள் தற்போது வெளியாகி வருகிறது.
இந்நிலையில், வருகிற ஏப்ரல் மாதம் தமிழ்ப் புத்தாண்டு தினத்திற்குப் பின்னர் புதிய கட்சி பற்றிய அறிவிப்பை ரஜினி வெளியிடுவார் என்று ரஜினி மக்கள் மன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் பெயர் இதுவரை இறுதி செய்யப்படவில்லை என்றும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூறியுள்ளதாக பேசப்படுகின்றது. இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் கட்சியின் முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், செப்டம்பர் மாதம் முதல் நடிகர் ரஜினி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியின் கொள்கை மற்றும் திட்டங்களை மக்களிடம் விளக்கி கூற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் மேலும் ஒரு செய்தி அரசியல் வட்டாரங்களில் இப்போது அனல் பறக்க தொடங்கியுள்ளது. ரஜினி கட்சி ஆரம்பித்து போட்டியிட்டால் அவர் எந்த இடத்தை தேர்ந்தெடுப்பார் ? என்பதுதான். அதற்கு சினிமா வட்டாரங்களில் பலரும் அவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் தொகுதியை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கின்றனர். தர்பார் படத்தில் வரும் ஒரு காட்சியில் நீங்கள் எந்த ஊரு என்ற வசனம் வரும்போது "நான் கிருஷ்ணகிரி பக்கத்தில் இருக்கும் சின்ன கிராமம்" என கூறியிருப்பார்.
2017 ஆம் ஆண்டு ஓர் விழாவில் பேசிய ரஜினி "இன்று நான் தமிழன். கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிகுப்பம் கிராமம் தான் எனது பூர்வீகம்" என கூறியிருந்தார். இது உண்மைதான் ரஜினியின் பூர்வீகம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் நாச்சிகுப்பம் என்ற கிராமம்தான். அதனால் ரஜினி கட்சி ஆரம்பித்த பின்பு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போட்டியிடுவார் என்று ஆணித்தரமாக கூறுகின்றனர் ரஜினியின் நெருங்கிய வட்டாரங்கள்.
மேலும் அந்த தொகுதியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக ஏரி துார் வாருவது, நலத்திட்ட உதவிகளை வழங்குவது போன்ற பல்வேறு பணிகளை செய்து வருவதாகவும் கூறுகின்றனர். மேலும் அந்த கிராம மக்களும் ரஜினி வேப்பனஹள்ளியில் போட்டியிட வேண்டும் என கூறியிருப்பதாக தெரிகிறது.