சமயபுரம் கோயிலில் மூட்டை மூட்டையாக காணிக்கை நகைகளை கட்டி வைத்திருந்தனர் என இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக பேசிய அமைச்சர் சேகர் பாபு, “சமயபுரம் கோயிலில் மூட்டை மூட்டையாக காணிக்கை நகைகளை கட்டி வைத்திருந்தனர், கடந்த 10 ஆண்டுகளாக நகைகளை கட்டி வைத்திருந்ததாக கூறினார்கள், இதை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம்.
தானமாக அளிக்கப்பட்ட நகைகளை இறைவனின் பயன்பாட்டில் உள்ள நகைகளை உருக்குவதில்லை. பயன்பாட்டிற்கு இல்லாத, உடைந்த நகைகளை மட்டுமே உருக்க திட்டமிட்டுள்ளோம். மன்னர்கள், ஜமீன்தார்கள், அறங்காவலர்கள் கொடுத்த நகைகளை உருக்க முயற்சிக்கவில்லை, 1000 ஆண்டுகள் பழமையான நகைகள் அப்படியே இருக்கின்றன. ஓய்வுப் பெற்ற நீதிபதிகளின் முன்னிலையில்தான் நகைகளை கணக்கிடும் பணியில் ஈடுபட உள்ளனர், நகைகளை பிரித்து முழுவதுமாக வீடியோ செய்யப்படவுள்ளது.
மத்திய அரசுக்கு சொந்தமான மும்பையில் உள்ள நிறுவனத்திடம் நகைகளை அளித்து 24 கேரட் தங்க பிஸ்கட்டுகளாக பெற்று வைப்பு வங்கியில் வைத்தால் வட்டித் தொகை பெரிய அளவில் கிடைக்கும் என கூறுகிறார்கள். இது இறைவன் சொத்து இறைவனுக்கே என்ற அடிப்படையிலான திட்டமே தவிர, மண்ணில் தூசி அளவு கூட இதில் தவறு நடக்காது என ஐய்யப்பன் மீது ஆணையிட்டு கூறுகிறேன். எனவே இதை யாரும் விமரசிக்க வேண்டாம், மற்ற திருப்பணி செலவுகளுக்கு இது தேவை” என தெரிவித்தார்.