தமிழகத்தில் மின்சாரம் தாக்கி ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சிங்காரப்பேட்டையைச் சேர்ந்த இந்திரா என்பவர், தனது பேத்தியை இடுப்பில் வைத்துக் கொண்டு, வீட்டின் முன்பாக உள்ள கம்பியில் துணியை காய வைத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சார கம்பியில் ஈரத்துணி பட்டதில் இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. அவர்கள் அலறம் சத்தம் கேட்டு, காப்பாற்ற வந்த இந்திராவின் மகள் மகாலட்சுமி மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் மூவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
இதே போன்று, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே தோட்டத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மறமடக்கி கிராமத்தில் வசித்த தமிழ்ச்செல்வி என்பவர் புல் எடுப்பதற்காக தோட்டத்திற்கு சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டது.
பள்ளத்திவிடுதியைச் சேர்ந்த விவசாயி மதிராஜா, தனது விவசாய தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தப்போது, மேலே சென்ற மின் கம்பிகள் மீது வாழை உரைசியதில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம் குளஞ்சாவடியை சேர்ந்த 17 வயதுடைய ரிச்சர்டு, புதுச்சேரியில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மொட்டை மாடியில் நின்று ரிச்சர்டு செல்போன் பேசிக் கொண்டிருந்த போது, மின்சாரம் தாக்கி தூக்கிவீசப்பட்டார். ஒரே நாளில் மின்சாரம் 6 உயிர்களைப் பறித்திருக்கிறது.