தமிழகத்தில் ஒரே நாளில் 15,684 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 15,684 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 94 பேர் உயிரிழந்துள்ளனர்
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 4,250 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டு 1,142, கோவை 1,056 பேருக்கும் ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 34 பேர் உயிரிழந்தனர். காஞ்சிபுரம் 9, சேலம் 5, செங்கல்பட்டு 4, மதுரை, தஞ்சையிலும் 4 என உயிரிழப்பு நேர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் இணை நோய் இல்லாத 14 பேர் ஒரேநாளில் உயிரிழந்துள்ளனர்.
இந்திய மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்தவரும், மருத்துவருமான அருணாச்சலம் கூறும்போது, "முகக்கவசத்தை ஒழுங்காக அணிவதும், தேவையின்றி கூட்டம் அதிகமுள்ள பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்ப்பதும் மிக மிக அவசியம். மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஏனெனில், இன்று சென்னையில் மட்டும் 4,000-ஐ தாண்டிவிட்டது பாதிப்பு. இப்போதே மருத்துவமனைகளில் இடமில்லாத சூழல் நிலவுகிறது. ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளை அட்மிட் செய்வதை தயங்கும் நிலைக்கு மருத்துவமனைகள் வந்துவிட்டன. பாதிப்பு எண்ணிக்கை மென்மேலும் கூடினால் நிலைமை மிக மிக மோசமாகிவிடும்.
எனவே, மக்கள் தங்களைத் தாங்களே காத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு மாஸ்கை ஒழுங்காக அணிய வேண்டும். அதேபோல் காய்ச்சல், அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் உடனே மருத்துவர்களை அணுக வேண்டும். தயக்கம் காட்டி நாள்களை கடத்தினால் அதிக பாதிப்பு ஏற்பட்டுவிடும். அறிகுறிகள் இருந்து பரிசோதனை செய்வதற்கு எடுத்துக்கொள்ள தாமதப்படுத்தும் ஒவ்வொரு மணி நேரமும் நோயாளிகளுக்கு ஆபத்தைக் கூட்டுவதுடன், தொற்று பரவலை அதிகப்படுத்தவே செய்யும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்"
சித்த மருத்துவர் சிவராமன் கூறும்போது, "அரசாங்கம் பொதுமுடக்கம் போடுகிறதோ இல்லையோ, மக்களாகிய நாம் முடங்கியிருக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். இன்னும் 15, 20 நாள்களில் கொரோனா பாதிப்பு மிக அதிக எண்ணிக்கையை எட்ட வாய்ப்பு இருக்கிறது. டெல்லி, மும்பை நிலை நமக்கு வராமலிருக்க நம்மை நாமே முடக்கிவைப்பதுதான் முதல் வழி. மரபு உணவுமுறைகள் மூலம் நம் உடலில் எதிர்ப்பாற்றலை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டியதும் அவசியம்" என்றார்.