தமிழ்நாடு

கூடுதல் விலைக்கு முகக்கவசங்கள், கிருமி நாசினிகள் விற்பனை: தனியார் மருந்து கடைக்கு சீல்

கூடுதல் விலைக்கு முகக்கவசங்கள், கிருமி நாசினிகள் விற்பனை: தனியார் மருந்து கடைக்கு சீல்

webteam

புதுக்கோட்டையில் கூடுதல் விலைக்கு முகக்கவசங்கள் மற்றும் கிருமி நாசினிகளை விற்பனை செய்த தனியார் மருந்துக் கடைக்குச் சீல் வைக்கப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் அச்சம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஆகவே முகக்கவசங்கள் மற்றும் கைகழுவும் திரவ கிருமிநாசினிகள் உள்ளிட்ட பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல்வேறு தனியார் மருந்துக் கடையில் பல மடங்கு கூடுதல் விலைக்கு முகக் கவசங்கள்,கிருமிநாசினிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகப் புகார் எழுந்து வந்தது.

இந்நிலையில் இது குறித்து புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மருந்துக்கடைகளில் அதிரடி ஆய்வு நடத்த மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவிட்டார். இதனடிப்படையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் புதுக்கோட்டை நகர்ப் பகுதியிலுள்ள மருந்துக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டபோது கீழ ராஜ வீதியிலுள்ள ஒரு தனியார் மருந்துக் கடையில் முகக் கவசங்கள் மற்றும் கைகழுவும் திரவங்கள் பல மடங்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் ஆட்சியர் உமாமகேஸ்வரி நேரில் வந்து சம்பந்தப்பட்ட கடையில் விசாரணை மேற்கொண்ட போது அங்கு கூடுதல் விலைக்கு முகக் கவசங்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து அந்த கடையை மூடி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இந்த சீல் வைப்பு குறித்து ஆட்சியர் உமாமகேஸ்வரி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர், “இதுபோல் கூடுதல் விலைக்கு விற்கும் மருந்துக் கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசின் உத்தரவையடுத்து இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெரும் ஜவுளிக் கடைகள் மற்றும் நகைக் கடைகள் பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றை உடனடியாக மூட உத்தரவிட்டுள்ளோம். மேலும் புதுக்கோட்டைப் பழைய இரணியன் அரசு மருத்துவமனை மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பிற்கான தனி வார்டுகள் அமைக்கப்பட்டு அங்கு மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளிக்கத் தயார் நிலையில் உள்ளனர். இதேபோல 18 தனியார் மருத்துவமனைகளிலும் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.