பெரம்பலூரில் நாய்க்கடியால் மூர்ச்சையாகிப்போன குரங்கின் உயிரை ஒருவர் பெரும் முயற்சி எடுத்து காப்பாற்றியுள்ளார். மனிதருக்கு செய்ய வேண்டிய முதலுதவிகளை குரங்கிற்கு செய்து காப்பாற்றிய கருணை நிகழ்வை பார்ப்போம்.
அன்பால் நிறைந்த உலகம் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் அவ்வப்போது நிகழ்வுகள் அரங்கேறுவதை நாம் காணமுடியும். அது போன்றதொரு மகத்தான சம்பவம் பெரம்பலூர் அருகே நிகழ்ந்துள்ளது. பெரம்பலூர் அருகே ஒதியம் சமத்துவபுரத்தில் குரங்கு ஒன்றை அப்பகுயில் இருந்த நாய்கள் கடித்துள்ளது. இதனால் பயந்து மரக்கிளையில் ஏறி மயக்கமடைந்த அந்த குரங்கு மூர்ச்சையாகி போனது. அதைப்பார்த்த கார் ஓட்டுனர் பிரபு என்பவர் வாஞ்சையான வார்த்தைகளை கூறி குரங்கை கிழே இறங்க செய்துள்ளார்.
குரங்கு கீழே வந்ததும் அதற்கு தண்ணீர் கொடுக்க அதைக்கூட குடிக்க முடியாமல் மீண்டும் மூர்ச்சையானது. பதறிப்போன பிரபு, அதன் நெஞ்சில் கைவைத்து அழுத்தியும், வாயோடு வாய் வைத்து மூச்சை செலுத்தியும் முதலுதவிகளைசெய்து நினைவடைய செய்துள்ளார்.
குரங்கின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்றெண்ணிய அவர், இருசக்கர வாகனத்தின் மூலம் பெரம்பலூர் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். மருத்துவர்களின் சிகிச்சைக்கு பிறகு கண்விழித்த குரங்கை பாதுகாப்பாக வனப்பகுதியில் விடவேண்டும் என்பதால் பிரபு, மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டுள்ளார். அதைத்தொடர்ந்து அங்கு வந்த வனத்துறை அதிகாரிகளிடம் குரங்கை ஒப்படைத்தார்.
இதனிடையே சிகிச்சைக்கு பிறகு கண்விழித்த குரங்கிடம் ஓட்டுனர் பிரபு குழந்தையிடம் பேசுவதுபோல் பேசும் வார்த்தைகள் காண்போரை நெகிழச் செய்தது. ஓட்டுனர் பிரபுவின் இந்த செயலை பலரும் பாராட்டினர். 'பிற உயிர்களிடத்தும் அன்பு செய்' என்ற கூற்றுக்கிணங்க நடந்த இந்த கருணை சம்பவம் பலராலும் பகிரப்பட்டு பாராட்டை பெற்று வருகிறது.