காஞ்சிபுரத்தில் இலவசமாக சாம்பார் கொடுக்காததால் உணவகத்திற்கு காவல்துறையினர் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததாக புகார் எழுந்துள்ளது.
காஞ்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள உணவகத்தில் கடந்த 9ஆம் தேதி காவலர் ஒருவர் இலவசமாக சாம்பார் கேட்டதாக கூறப்படுகிறது. இலவசமாக வழங்க முடியாது என உணவக ஊழியர்கள் தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. அடுத்த நாள் அந்த உணவகத்திற்கு சென்ற உதவி ஆய்வாளர் ராஜமாணிக்கம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை என கூறி 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.
அப்போது உடனிருந்த சம்பந்தப்பட்ட காவலர், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க சிபாரிசு செய்ததால் அபராதத் தொகை 10 மடங்கு உயர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி வியாபாரிகள் சங்கத்தினர் காஞ்சிபுரம் எஸ்.பி-யிடம் புகார் அளித்துள்ளனர். அதேநேரத்தில் இலவசமாக சாம்பார் கேட்கவில்லை என்றும் 10 ரூபாய்க்கு வழங்குமாறு கேட்டதாகவும் காவலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.