நாட்டிலேயே தமிழகத்தில் தான் சிறைக் கைதிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. உத்திரபிரதேசத்தில் அதிக அளவிலான குற்றவாளிகள் சிறைகளில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 9 மத்திய சிறைகள் உட்பட மொத்தம் 138 சிறைகள் உள்ளன. நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவு சிறைகள் உள்ளதாகவும், ஆனால், குறைந்த அளவிலான கைதிகளே இருப்பதாகவும் புள்ளி விவரம் தெரிவித்துள்ளது. சிறை கைதிகள் தொடர்பாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில், தமிழக சிறைகளில் அவற்றின் கொள்ளளவில் 61.3 சதவீத கைதிகளே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சிறைகளில் 22 ஆயிரத்து 792 கைதிகளை அடைப்பதற்கான இடவசதி உள்ளது. ஆனால் 13 ஆயிரத்து 999 கைதிகளே உள்ளனர். 601 பெண் கைதிகள், 112 வெளிநாட்டு கைதிகள் தமிழக சிறைகளில் உள்ளனர். தூக்குதண்டனை கைதிகள் 6 பேரும், ஆயுள் கைதிகள் 2 ஆயிரத்து 495 பேரும் தமிழக சிறைகளில் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அதிக சிறை கைதிகள் கொண்ட மாநிலமாக உத்தரபிரதேசம் உள்ளது. இயல்பை விட 65 சதவீதம் அதிகமாக அதாவது 165 சதவீத கைதிகள் சிறைகளில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக சட்டீஸ்கர் மாநிலத்தில் 157.2 சதவீதம் கைதிகள் அம்மாநில சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறைகளிலிருந்து கைதிகள் தப்பிச் செல்வதில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த விவகாரத்தில் உத்தரபிரேதசமும் தமிழகத்தோடு 2-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளது. கைதிகள் தப்பிச் செல்வதில் குஜராத் மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது.