தமிழ்நாடு

நான்கு நாட்களில் மட்டும் 8 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

நான்கு நாட்களில் மட்டும் 8 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

webteam

தமிழகத்தில் கடந்த 4 நாள்களில் மட்டும் எட்டு கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 24.8 கிலோ தங்கத்தை வருவாய்ப் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை பிப்ரவரி 21ஆம் தேதி அன்று வெளிநாட்டிலிருந்து சென்னை வந்த பயணிகள் சிலரிடம் 6 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 17.9 கிலோ தங்கம் சிக்கியது. பயணிகள் கொண்டு வந்த ஹோம் தியேட்டர், மைக்ரோ வேவ் ஓவன் போன்ற வீட்டுப் உபயோகப் பொருள்களில் மறைத்து தங்கம் கடத்தப்பட்டிருந்தது. ஆனால், தங்கத்தை கடத்தி வருகிறோம் என்பது இந்தப் பயணிகளுக்கே தெரியாமல் இருந்துள்ளது. 

எப்படி நடந்தது இந்தக் கடத்தல்?

இவ்வளவு நாள்களாக சுங்கத்துறை மற்றும் வருவாய்ப் புலனாய்வுத் துறையின் கண்களில் மண்ணைத் தூவிய கடத்தல் கும்பல் மலேசியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்துள்ளது. துபாய், மலேசியா மற்றும் சிங்கப்பூரிலிருந்து இந்தியா வரும் பயணிகளை கடத்தல் கும்பல் அணுகும். தங்கம் மறைத்து வைக்கப்பட்ட வீட்டு உபயோகப் பொருள்களை அவர்களிடம் கொடுத்து இந்தியாவில் இருப்பவரிடம் சேர்க்கும்படி கூறுவார்கள். அதற்காக அவர்களுக்கு பணம் வழங்கப்படும். 

தங்கக் கடத்தலைப் பற்றி ஏதுமறியாத பயணிகளும் பொருள்களை இந்தியா கொண்டு வந்து சேர்த்து விடுவர். கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் அவர்களிடமிருந்து பொருள்களை பெற்றுக் கொள்வர். அவற்றை மண்ணடிக்கு கொண்டு சென்று தங்கத்தைப் பிரித்தெடுப்பர். குறிப்பாக, சென்னையைக் குறி வைத்தே அதிகளவில் கடத்தல் நடந்துள்ளது. கடத்தல்காரர்களிடமிருந்து சுமார் 18 கிலோ தங்கம் மட்டுமின்றி ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஐஃபோன்கள், ஸ்மார்ட் வாட்சுகள் மற்றும் பென் ட்ரைவ்களை பறிமுதல் செய்துள்ளது வருவாய் புலனாய்வுத்துறை. 33 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு பணமும் சிக்கியுள்ளது. கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 3 கார்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுதொடர்பாக கடத்தல் கும்பலின் தலைவன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கில்லாடி கடத்தல் கும்பலை மிஞ்சியுள்ளது மற்றொரு கும்பல். விமானத்தில் தங்கம் கடத்தி வந்தவர்கள் விமான இருக்கையிலேயே மறைவிடம் ஏற்படுத்தி தங்கம் கடத்தியுள்ளனர். கடந்த திங்கள்கிழமை வெளிநாட்டிலிருந்து சென்னைக்கு வந்த விமானம் ஒன்றிற்குள் அதிரடியாக சோதனை நடத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் இருக்கைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5.7 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ஒரு கோடியே 97 லட்சம் ரூபாயாகும். அன்றே மலேசியாவிலிருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட 1.13 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.