சென்னையில் காவல்துறையினர் நேற்று திடீரென அமல்படுத்திய புதிய கட்டுப்பாட்டால் வேலைக்கு செல்வோர் கடும் அவதிக்குள்ளாகினர்.
சென்னையில் உள்ள 12 காவல் மாவட்ட எல்லைகளில் 13 எல்லை வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காவல் நிலைய சரகங்களில் உரிய சாலை தடுப்புகள் அமைத்து செக்டர்களாக ஏற்படுத்தி அப்பகுதியிலேயே வசிக்கும் மக்கள் அவர்களுக்கு வேண்டிய காய்கறி, உணவுப் பொருட்கள், மளிகைப் பொருட்கள் வாங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் அனைத்து காவல் நிலைய சரகங்களையும் ஒருங்கிணைத்து முக்கிய சந்திப்புகள், சரக எல்லைகள் என 153 வாகனத் தணிக்கைச் சாவடிகள் அமைக்கப்பட்டு காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர். அரசால் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி வெளியே வருபவர்கள் உரிய இ-பதிவு செய்து அனுமதி பதிவு பெற்றிருக்க வேண்டும். இ-பதிவு செய்யாமல் வெளியே வருபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை பெருநகரில் 348 செக்டார்கள் உருவாக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வசிக்கும் சரகத்திலிருந்து மறு காவல் நிலைய எல்லைக்குள் செல்லாதவாறு காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. மறு காவல் நிலைய எல்லைக்கு செல்பவர்கள் உரிய இ-பதிவு செய்திருக்க வேண்டும்.
சென்னை பெருநகரில் நேற்று மாலை வரை சென்னை பெருநகர காவல் குழுவினர் மேற்கொண்ட தணிக்கை மற்றும் சோதனையில், சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல் குழுவினரால் சென்னை பெருநகரில் கொரோனா ஊரடங்கு தடையை மீறியது தொடர்பாக 3,315 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றியது தொடர்பாக 4,107 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், முகக்கவசம் அணியாமல் சென்றது தொடர்பாக 3,044 வழக்குகளும், சமூக இடைவெளி கடைபிடிக்காதது தொடர்பாக 345 வழக்குகளும், பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தமிழக அரசின் ஊரடங்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து கொரோனா தொற்றை தடுக்க சென்னை பெருநகர காவல்துறை கேட்டு கொண்டுள்ளது.