தமிழ்நாடு

”6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்” - இந்திய வானிலை ஆய்வு மையம்

நிவேதா ஜெகராஜா

வானிலை ஆயுவு மையம் இன்று காலை தெரிவித்திருந்த தகவலின்படி, தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தமிழக கடற்கரை பகுதியை நாளை காலை 11 மணி அளவில் நெருங்கும். அதனை தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா, வட தமிழகம் - புதுச்சேரி கடற்கரையை காரைக்காலுக்கும் - ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் கடலூருக்கு அருகில் நாளை மாலை கடக்கக்கூடும். இதன் காரணமாக வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தரைக்காற்று மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் 11ஆம் தேதி காலை முதல் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டது.

தற்போது இந்திய வானிலை மையம் புதிய தகவலை கொடுத்துள்ளது. அதன்படி, இன்னும் ஆறு மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள தகவலின்படி, "தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 11-ம் தேதி காலை வட தமிழக கடற்கரையை வந்தடையும். இதற்கு பிறகு ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் காரைக்காலுக்கு இடையே கடலூருக்கு அருகே நாளை மாலை கரையை கடக்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.