முதலமைச்சர் முகநூல்
தமிழ்நாடு

வரலாற்றில் வரப்போகும் மாற்றம்... முதலமைச்சர் அறிவித்த முக்கிய அறிவிப்பு இதோ!

“இந்த விழாவின் மூலம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடப்போவதாக நேற்றைய தினம் தெரிவித்திருந்தேன். அது என்னவென்று பலரும் கேட்டுக்கொண்டே இருந்தார்கள்”

ஜெனிட்டா ரோஸ்லின்

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘இரும்பின் தொன்மை’ என்ற நூலை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். அதேபோன்று கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியம் ஆகியவற்றுக்கும் அடிக்கல் நாட்டிய முதலமைச்சர், கீழடி இணையதளத்தினை தொடங்கி வைத்தார்.

மேலும், இந்த அரசு நிகழ்ச்சியில் முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிட இருப்பதாக நேற்றைய தினம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

அதைக்குறிப்பிட்டு இன்று நிகழ்வில் இதில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “இந்த விழாவின் மூலம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடப்போவதாக நேற்றைய தினம் தெரிவித்திருந்தேன். அது என்னவென்று பலரும் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். அதை இங்கே சொல்கிறேன். தமிழர்களின் தொன்மையை உலகத்துக்கு சொல்லும் ஒரு மாபெரும் ஆய்வு பயணத்தை நான் அறிவிக்க போகிறேன். நேரலையில் இதை பார்ப்பவர்களும் கவனமாக கேளுங்கள்.

தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது. இந்திய நாட்டிற்கு மட்டுமல்ல... இந்த உலகுக்கே இதை மீண்டும் கூறுகிறேன்.

தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது. 5,300 ஆண்டுகளுக்கு முன்பே உருக்கு இரும்பு தொழில்நுட்பம் தமிழ் நிலத்தில் அறிமுகமாகி விட்டது.

இப்போது தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் மூலம் அண்மையில் கிடைக்கப்பெற்ற கால கணக்கீடுகள், இரும்பு அறிமுகமான காலத்தை கிமு 4,000 ஆண்டுகளின் முற்பகுதியில் கொண்டு சென்றிருக்கிறது.

தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் 5300 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு அறிமுகம் ஆகி இருக்கும் என்பதை உறுதியாகக் கூறலாம் . இதை ஆய்வில் முடிவாகவே நான் அறிவிக்கிறேன்.

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை முலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் சேகரிக்கப்பட்டு, அவை உலகத்தின் தலைசிறந்த ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அதனை ஒப்பாய்வு செய்ததில் அனைத்திலும் ஒரே முடிவுகள் கிடைக்கிறது. கதிரியக்க கால கணக்கீடுகள் மற்றும் ஓஎஸ்எல் பகுப்பாய்வு கால கணக்கீடுகள் அடிப்படையில் கிமு 3345 திலிருந்து தென்னிந்தியாவில் இரும்பு அறிமுகமாகிவிட்டது என்று தெரிய வருகிறது. இந்த முடிவுகளை பாராட்டி அறிஞர் பெருமக்கள் அனைவரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவை அனைத்தையும் தொகுத்துதான் ’இரும்பின் தொன்மை’ என்ற நூல் வெளியிடப்பட்டிருக்கிறது." என்று தெரிவித்துள்ளார்.