சென்னையில் இரண்டு நாட்களுக்கு மழை அறிவிப்பு pt web
தமிழ்நாடு

”வங்கக் கடலில் மற்றுமொரு காற்றழுத்த தாழ்வு மண்டலம்..” - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

PT WEB

சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் நவம்பர் 22-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 22 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் நிலையில், சென்னையில் இரண்டு நாளைக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, சென்னையின் ஒரு சிலப் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

அதேபோல சென்னையின் அதிகபட்ச வெப்பநிலை 31 முதல் 32 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை

தொடர்ந்து, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 6 சதவீதம் குறைந்துள்ளது. அதன்படி, அக்டோபர் 1ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை 298 மில்லி மீட்டர் மழை பதிவாகும். ஆனால், இந்த வருடம் 281 மில்லி மீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளது. இது, இயல்பை விட 6 சதவீதம் குறைவு எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மற்றுமொரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்..

நவம்பர் 27 ஆம் தேதி வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக, கடலோர ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மழை பொழியும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம்

முன்னதாக, நவம்பர்-22 ஆம் தேதி உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுவதற்கு வாய்ப்புள்ளதாகவும், இதன்மூலம் தமிழக்தின் காவிரிப்படுகை மற்றும் தென் தமிழகத்தில் கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், 27ஆம் தேதி மற்றுமொரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகவிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.