தமிழ்நாடு

சட்டவிரோத பத்திரப்பதிவு: தாம்பரம் சார் பதிவாளர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு

kaleelrahman

தாம்பரத்தில் வனப்பகுதிக்கு சொந்தமான நிலத்தை சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்து கொடுத்த தாம்பரம் சார் பதிவாளர் உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

தமிழகத்தில் அங்கீகரிக்கப்படாத மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்தது தொடர்பாக பத்திரப்பதிவுத் துறை தலைமை அலுவலகம் சிறப்பு குழு ஒன்று அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. தொடர்ந்து பல சார்பதிவாளர்கள் சிக்கி வரும் நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக தாம்பரம் சார் பதிவாளர் வெங்கடசுப்ரமணியன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சர்வே எண் 392ஃ1 -ல் உள்ள தாம்பரம் பகுதியில் வனப்பகுதிக்கு சொந்தமான இடங்கள் உள்ளது. இந்த வனப் பகுதிக்குச் சொந்தமான நிலங்களை 8 விதமான பத்திரப்பதிவு மூலம் போலியான ஆவணங்களை பயன்படுத்தி ஆக்கிரமிப்பு செய்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

குறிப்பாக இரண்டு விற்பனை பத்திரம் மற்றும் 6 செட்டில்மெண்ட் பத்திரப்பதிவு செய்து வனப்பகுதிக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தது தெரியவந்துள்ளது. போலியான ஆவணங்கள் மூலம் வனப் பகுதியை ஆக்கிரமித்து முறைகேடாக பத்திரப்பதிவு செய்ய உடந்தையாக இருந்த 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. சமீபகாலமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்தடுத்து சார் பதிவாளர்கள் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் சிக்கி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.