தமிழ்நாடு

பாலிடெக்னிக் மாணவர் சுட்டுக் கொலையான விவகாரம் - கள்ளத்துப்பாக்கி பயன்பாடு குறித்து அதிர்ச்சி தகவல்

webteam

காஞ்சிபுரத்தில் பாலிடெக்னிக் மாணவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், கள்ளத்துப்பாக்கி பயன்பாடு குறித்த அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன.

கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் வெடித்திருக்கும் துப்பாக்கி குண்டு, அங்குள்ள மக்களின் பொது அமைதிக்கே வேட்டு வைத்திருக்கிறது. முன்பு எல்லாம் பட்டாகத்தி, வீச்சரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களோடு மோதிக் கொண்ட ரவுடிகள், தற்போது சினிமா ஸ்டைலில் துப்பாக்கியை கையிலெடுத்திருக்கிறார்கள். வேங்கடமங்கலத்தில் கடந்த 5ஆம் தேதி பாலிடெக்னிக் மாணவர் முகேஷ், சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவமும், அதையே‌தான் உணர்த்துவதாக இருக்கிறது. 

கள்ளத்துப்பாக்கி குறித்த விசாரணையை தீவிரப்படுத்தியபோது, கஞ்சா வியாபாரிகளின் தொழில்போட்டியும், அவர்களின் ஆயுதப்பயன்பாடு குறித்த விவரமும் காவல்துறைக்கு தெரியவந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தாழம்பூர், கூடுவாஞ்சேரி, கேளம்பாக்கம், காயார் உள்ளிட்ட இடங்கள், சென்னையின் புறநகர் பகுதிகளாக உள்ளன. அதனால் படிப்புக்காகவும், வேலைக்காகவும் சென்னை வரும் இளைஞர்கள் பெரும்பாலானோர், இப்பகுதியிலேயே தங்குகிறார்கள். அவர்களை குறி வைத்து மறைமுறைமாக செயல்பட்டுவரும் 2 கும்பல்கள், மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் கஞ்சா சப்ளை செய்து வருவதாக கூறப்படுகிறது. 

ஒரு குழுவுக்கு நெடுங்குன்றத்தைச் சேர்ந்த சூர்யாவும், மற்றொரு குழுவுக்கு பெருமாட்டுநல்லூரைச் சேர்ந்த செல்வமும் GANG LEADER-களாக செயல்பட்டு வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாணவர் முகேஷ் கொலை வழக்கில் சரணடைந்துள்ள விஜய், GANG LEADER-ஆன செல்வத்தின் கும்பலைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. இவர் முக்கிய பிரமுகர் ஒருவரை பணம் கேட்டு மிரட்டிய வழக்கில், 2017ஆம் ஆண்டு சிறை சென்றவர். 

முகேஷ் கொலையால் இரு கும்பல்களிடமும் கள்ளத்துப்பாக்கிகள் இருப்பது உறுதியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எல்லா ஏரியாக்களிலும் நடப்பதைப் போலவே, இவ்விரு கும்பல்களுக்கிடையே யார் பெரியவர் என்ற அதிகாரச் சண்டை இருந்து வருகிறது. அதற்காக, எதிராளிகளை மிரட்டவும், ஒரு கெத்துக்காகவும் இவர்கள் கள்ளத்துப்பாக்கிகளை வாங்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை ஏதேனும் எடுக்கப்பட்டுள்ளதா என காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையினரை தொடர்புகொண்டபோது, விளக்கமளிக்க மறுத்துவிட்டனர். இதுபோன்ற சம்பவங்களால் பதற்றமடைந்துள்ள பொதுமக்கள், துப்பாக்கி ஏந்தும் கைகளுக்கு காவல்துறை விலங்கு பூட்டுமா என எதிர்பார்ப்பில் உள்ளனர்.