தமிழ்நாடு

உடல்நலக் குறைவு: சிவசங்கர் பாபா செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி

kaleelrahman

பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிறையில் உள்ள சிவசங்கர் பாபா உடல்நலக்குறைவு காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரையடுத்து, தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு செங்கல் பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை கடவுளின் அவதாரம் என தன்னை வெளிப்படுத்திக் கொண்ட சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா, பாலியல் குற்றச்சாட்டில் காசியாபாத்தில் கைது செய்யப்பட்டு விமானம் மூலமாக சென்னை அழைத்துவரப்பட்டார். பின்னர் அவரிடம் நேற்று காலையில் தொடங்கி சுமார் 10 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். பள்ளி மாணவிகளின் புகார்கள், டேராடூனில் இருந்து தப்பிச் சென்ற விவகாரம் தொடர்பாக சிவசங்கர் பாபாவிடம் கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது.

அதன்பின் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவருக்கு மருத்துவப் பரிசோதனையும், கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அங்கிருந்து சுஷில் ஹரி சர்வதேச பள்ளிக்கு அழைத்துச் சென்று சிறிது நேரம் விசாரணை நடத்திய போலீசார், பின்னர் செங்கல்பட்டு மகிளா நீதிமன்ற நீதிபதி அம்பிகா முன் ஆஜர்படுத்தினர். அப்போது அங்கு திரண்டிருந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய மாதர் சங்கத்தினர், சிவசங்கர் பாபாவை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

நீதிமன்றத்துக்குள் நுழைய முயன்றவர்களை கைதுசெய்து அப்புறப்படுத்தியபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் விசாரணை நடத்திய நீதிபதி, உங்கள் மீது என்ன வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது? எதற்காக கைது செய்தார்கள்? என சிவசங்கர் பாபாவிடம் கேட்டார். அதற்கு தெரியும் என்று மட்டும் அவர் கூறினார். மேலும் நீதிபதியிடம், கே.கே.நகர் பத்மா சேஷாத்திரி பாலியல் பிரச்னை எழுந்தபோது தன்னையும் பாலியல் குற்றச்சாட்டில் சேர்த்து விட்டதாகவும், தன் மீது கொடுத்துள்ள புகார் பொய்யானது என்றும் கூறினார்.

அப்போது சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கில் கிடைத்துள்ள ஆதாரமாக உள்ள இமெயில் ஒன்றையும், போட்டோ ஒன்றையும் காட்டினர். இதையடுத்து, நீதிபதி அம்பிகா, சிவசங்கர் பாபாவை ஜூலை 1ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அப்போது தனக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கும்படி சிவசங்கர் பாபா நீதிபதியிடம் கேட்டார். ஆனால் நீதிபதி அனுமதி கொடுக்கவில்லை. அரசு மருத்துவமனையிலாவது அனுமதியுங்கள் என்று கேட்டதற்கும் அனுமதி கிடைக்கவில்லை.

உடனே சிவசங்கர் பாபா உடல்நிலை குறித்து அவரது வழக்கறிஞர் மருத்துவ சான்றிதழ்களை நீதிமன்றத்தில் கொடுத்தார். இதையடுத்து சிபிசிஐடி போலீசார் சிவசங்கர் பாபாவை பாதுகாப்போடு செங்கல்பட்டு சிறையில் அடைக்க அழைத்து சென்றனர். ஆனால், மருத்துவச் சான்று இல்லாததால் சிறையில் அடைக்க அதிகாரிகள் மறுத்தனர். இதன்பிறகு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து சான்று வாங்கி வந்தபின்னர் சிவசங்கர் பாபா சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக, நீதிமன்ற வழக்கு இருதரப்பு வாதங்களை கேட்டு செய்தி சேகரிக்க உள்ளே செல்ல செய்தியாளர்களுக்கு காவல்துறை அனுமதிக்கவில்லை. தடுப்புகள் அமைத்து பாதையை மூடி விட்டனர்.

இதையடுத்து சென்னை சுஷில்ஹரி பள்ளியிலுள்ள சிவசங்கர் பாபாவின் அறைக்கு சீல் வைக்கப்பட்டது. சிவசங்கர் பாபாவின் அறையில் இருந்து கணினியின் ஹார்ட் டிஸ்க்குகளை சிபிசிஐடி போலீஸ் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த பக்தர்கள் சுஷ்மிதா, நீரஜ், கருணாவிடம் சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.