காப்புரிமை பெறாமல் தனது பாடல்களைப் பயன்படுத்தியதாக எக்கோ இசை நிறுவனம் மீது இளையராஜா அளித்த புகார் தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தனது பாடல்களை காப்புரிமை பெறாமல் பயன்படுத்தியதாக எக்கோ உள்ளிட்ட சில இசை நிறுவனங்கள் மீது கடந்த 2010ஆம் ஆண்டில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் இசையமைப்பாளர் இளையராஜா புகார் செய்திருந்தார். இந்தப்புகாரின் மீது காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதை எதிர்த்து எக்கோ நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த மனுவில், “இளையராஜாவின் புகாரை வழக்குப்பதிவு செய்த போலீசார் தங்களது நிறுவனத்திடமிருந்து 20,000 காம்பாக்ட் டிஸ்க்குகளை பறிமுதல் செய்தனர். இளையராஜா இசையமைத்த பாடல்களுக்கு அவர் உரிமை கோர முடியாது ஏனென்றால் அவர் பணம் வாங்கிக் கொண்டுதான் இசையமைத்து வருகிறார்” என்று எக்கோ நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது, பாடல்களுக்கு இசையமைப்பாளர் பணம் பெறுவதால், பட நிறுவனத்துக்கே பாடல்கள் உரிமையாகி விடும் என்று எக்கோ நிறுவனத் தரப்பில் வாதிடப்பட்டது. இது காப்புரிமை தொடர்பானது என்பதால் குற்றவியல் விசாரணைக்கு இடமில்லை என்று மத்திய குற்றப்பிரிவு தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து, வழக்கை நீதிபதி முரளிதரன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். “இந்தப் பிரச்சினை ஒரு சிவில் பிரச்சினை என்பதனால் கிரிமினல் புகார் அளிக்க முடியாது” என்று கூறி இளையராஜா அளித்த புகாரை நீதிபதி தள்ளுபடி செய்தார்.