மக்களை மகிழ்விக்கும், அவர்களது துன்பத்தில் ஒருவனாக பங்கெடுக்கும் ஒரு மகத்தான பணியை மேற்கொள்பவனே கலைஞன். அப்படி தன்னுடைய குரலின் மூலம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய மக்களுடைய வாழ்வில் ஒருவராக இருந்து அவர்களுக்கு என்றும் இனிமையாக பாடல்களை கொடுத்து வருபவர் தான் எஸ்.பி.பாலசுப்ரமணியம். 16 இந்திய மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களை அவர் பாடியிருக்கிறார் என்பதே அதற்கு சான்று. அப்படிபட்ட மகா கலைஞன் இன்று கொரோனாவின் பிடியில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஐசியுவில் அவர் சிகிச்சையில் உள்ளார் என்ற செய்தியே கோடிக்கணக்கான அவரது ரசிகர்களை களங்க வைத்துவிட்டது.
மருத்துவமனையில் இருக்கும் எஸ்.பி.பி குணமடைந்து நலமுடன் திரும்பி வரவேண்டும் என்ற ரசிகர்கள் தொடங்கி ஏ.ஆர்.ரஹ்மான், தனுஷ் உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்களும் தங்களது பிரார்த்தனைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய ஆருயிர் நண்பனுக்காக உருக்கமாக பேசி வீடியோவையும் வெளியிட்டு இருக்கிறார். திரையுலகை தாண்டியும் பலரும் தங்களது வருத்தத்தையும் அவர் மீண்டு வரவேண்டும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறார்கள்.
இப்படி எல்லோரும் எஸ்.பி.பி நலமுடன் திரும்பி வரவேண்டும் என்று தங்களது விருப்பத்தை தெரிவித்து வரும் வேளையில், சிலர் அவரது உடல்நிலை குறித்து தவறான தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள். பலரும் அந்த தகவல்களை ஷேர் செய்து வருகிறார்கள். இது மிகவும் இழிவான செயல் என்பதில் துளியளவும் ஐயம் தேவையில்லை. தனது தந்தை குறித்த தகவல்களை தாங்களே அவ்வவ்போது தெரிவிப்போம் என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மிகுந்த வருத்தத்துடன் அவரது மகன் எஸ்.பி.பி சரண் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
பிரபலங்கள் குறித்து இப்படியான வதந்திகள் பரப்பப்படுவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்பு பலருக்கும் இதுபோல் நடந்துள்ளது. உயிரோடிருக்கும் ஒருவரை இவர்களே பலமுறை கொன்றுவிடுகிறார்கள். நலமுடன் இருப்பவர்களை இவர்களே சீரியஸான நிலைக்கு கொண்டு சென்றுவிடுகிறார்கள். இது மிகவும் வேதனையான விஷயம். இதனை செய்பவர்கள் இது கேவலமான செயல் என்பதை தெரிந்தே செய்கிறார்கள் என்றே தோன்றுகிறது. உயிரோடு இருக்கும் ஒருவர், தான் இறந்துவிட்டதாக வரும் செய்தியை எப்படி எதிர்கொள்வார் என்பதை சற்றே நினைத்துப் பார்த்தால் அந்த வலி புரியும். அது எத்துனை கொடுமையானது. இதற்கு முன்பும் பலரும் இத்தைய வதந்திகளால் நொந்து மிகுந்த வருத்தத்துடன் தான் உயிருடன் தான் இருக்கிறேன் என்பதை வெளியுலகிற்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள்.
தெரிந்தே இதனை சில விஷமிகள் செய்கிறார்கள் என்பதை ஒருபுறம் வைத்துக் கொள்வோம். ஆனால், அப்பாவியான ரசிகர்கள் பலரும் தங்களுக்கு வரும் தகவல்களை உறுதி செய்யாமல், அதனை ஃபார்வேட் செய்துவிடுகிறார்கள். இதுதான் மிகவும் வருத்தத்திற்கு உரியது. அவசரம் வேண்டாம். நிதானத்தை கடைபிடிப்போம். அதுவே, நாம் நேசிக்கும் பிரபலங்களுக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதை.