தமிழ்நாடு

வருமானத்திற்கு அதிகமாக 131% சொத்து சேர்ப்பு: இளங்கோவன் மீதான எஃப்.ஐ.ஆர். சொல்வது என்ன?

JustinDurai
சேலம் மத்திய கூட்டுறவு வங்கி சங்க தலைவர் இளங்கோவன், வருமானத்திற்கு அதிகமாக 131 சதவீதம் சொத்து சேர்த்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சேலம் மத்திய கூட்டுறவு வங்கி சங்க தலைவர் இளங்கோவனின் வீடு மற்றும் அவருடன் தொடர்புடைய 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இதையடுத்து சேலத்தில் இளங்கோவன் மற்றும் அவரது மகன் பிரவீன்குமார் மீது லஞ்ச தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இளங்கோவன் 2014 முதல் 2020 வரை பதவியில் இருந்த அதிகாரத்தை பயன்படுத்தி தன்னுடைய பெயரிலும் மகன் பெயரிலும் சொத்துக்களை குவித்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு இளங்கோவனின் சொத்து மதிப்பு ரூ.30 லட்சம். ஆனால் 2020-ஆம் ஆண்டு கணக்கின்படி அவரது சொத்து மதிப்பு ரூ. 5.6 கோடியாக உள்ளது. மாத வருமானத்தைப் வைத்து பார்த்தால் அவரது சொத்து மதிப்பு ரூ. 2.88 கோடி மட்டுமே இருக்க வேண்டும். பதவியில் இருந்த காலத்தில் ரூ. 5.30 கோடி சொத்து சேர்த்துள்ளார். இதில் ரூ.1.35 கோடி செலவு செய்துள்ளார். சேமிப்பில் ரூ. 1.52 கோடி வைத்துள்ளார்.
3.78 கோடி ரூபாய் அளவிற்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார். அதாவது, வருமானத்திற்கு அதிகமாக 131 சதவீதம் சொத்து சேர்த்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டவிரோத பணத்தை கல்வி நிலையங்களில் முதலீடு செய்தும், பினாமி பெயரில் சொத்து வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.