தமிழ்நாடு

மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம்: சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம்: சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

webteam

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக சிபிஐ அல்லது தன்னிச்சையான அமைப்பின் விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய வழக்கின் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்திப், நவம்பர் 9-ஆம் தேதி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். இதுதொடர்பான வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் இந்தாண்டு நவம்பர் வரை சென்னை ஐஐடி-யில் 5 மாணவர்கள் இதேபோல் மர்மான முறையில் உயிரிழந்துள்ளதாகவும், பாத்திமா மரணத்திலும் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால் இந்த வழக்கை சிபிஐ போன்ற தன்னிச்சையான விசாரணை அமைப்பின் விசாரணைக்கு உத்தரவிடக்கோரி காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பின் தமிழக தலைவர் என்.அஸ்வத்தமன் பொதுநல வழக்கு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், என்.ஷேசாயி அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு விசாரித்து வருவதாகவும், அதில் சிபிஐ-யில் பணியாற்றிய இருவர் பங்கேற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் மனுதாரர் அரசியல் கட்சியை சார்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், நடவடிக்கை எடுக்கவில்லை என எப்போது மனு கொடுக்கப்பட்டது என்றும்,  அதற்கான அத்தாட்சி நகல் எங்கே என கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர் தரப்பில் நவம்பர் 18-ல் புகார் அனுப்பியதாகவும், அதனை மின்னஞ்சல் மூலமாக அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் வழக்கின் மீதான தீர்ப்பை ஒத்திவைத்தனர்.