சென்னை ஐஐடி மாணவர் ஒருவர் வைரஸ் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார். மேலும், ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் உள்பட பலருக்கு காய்ச்சல் அறிகுறி இருப்பதாக அச்சம் எழுந்துள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஷூடுமு பிரேம் அவினாஷ் எனும் மாணவர் சென்னை ஐஐடி கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.
இதனிடையே கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதுபோன்ற காய்ச்சல் அறிகுறிகள் எதுவும் இல்லை என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.