ஐஐடி மாணவியின் தற்கொலைக்கு ஆசிரியர்களே காரணம் என அவரது தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.
கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப். இவர் சென்னை ஐஐடி வளாகத்தில் சராவியு பெண்கள் விடுதியில் தங்கி, முதலாம் ஆண்டு எம்.ஏ. படித்து வந்தார். இவர் கடந்த 8ஆம் தேதி இரவு 12.00 மணிக்கு தனது அறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தற்போது பூதாகரமாகியுள்ளது.
இவர் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் தற்கொலை செய்துகொண்டதாக ஆரம்பத்தில் ஒரு தகவல் பரவியது. இந்நிலையில் பாத்திமாவின் போனில் இருந்து எடுக்கப்பட்ட ஆதாரங்கள் அதிர்ச்சியை கிளப்பியுள்ளன. பாத்திமா இறந்த பின்னர் அவரது போனை எடுத்துப்பார்த்த அவரது தங்கை ஆயிஷா அதிர்ந்துபோனார். அதில், தனது மரணத்திற்கு ஆசிரியர் சுதர்சனம் பத்மநாபன் தான் காரணம் என பாத்திமா குறிப்பு எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் தற்கொலை காரணமாக மேலும் சில ஆசிரியர்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்ததாக தெரிகிறது.
இதையடுத்து போனில் இருந்த ஆதாராங்களை திரட்டிய பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப், அனைத்தையும் கோட்டூர்புரம் காவல்துறையினரிடம் கொடுத்து புகார் அளித்துள்ளார். ஏற்கனவே தற்கொலை தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரில் சென்னை கோட்டூர்புரம் போலீஸார் சரியான விசாரணை நடத்தவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த ஆதாரத்திற்கு பின் விசாரணை வேகமெடுத்திருக்கிறது.
இதற்கிடையே நேற்று கேரளாவில் செய்தியாளர்களிடம் பேசிய அப்துல் லத்தீப், “எனது மகள் இறப்பதற்கு முன்பு 28 நாட்களாக கொடுமையை அனுபவித்துள்ளார். அது என்ன மாதிரியான கொடுமை என தெரியவில்லை. ஆனால் மனதை புண்படுத்தியுள்ளனர். அவரது இறப்பிற்கு நீதி கேட்டு நான் எனது இறுதி மூச்சு இருக்கும் வரை போராடுவேன்.
இந்த ஆதாரத்தைக் கொண்டு போலீஸார் நியாயமான விசாரணை நடத்த வேண்டும். எனது மகள் தனது பிரச்னைகள் குறித்து யாரிடமும் பகிர்ந்துகொள்ளமால் இருந்துள்ளார். அவர் செல்போனில் பதிவு செய்துள்ள ஆசிரியர் இதற்கு முன்னர் பல மாணவர்களை அழுகச் செய்துள்ளதாக, மற்ற மாணவர்கள் என்னிடம் கூறினர்” என்று அழுதபடி கூறியுள்ளார்.
அத்துடன், இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறைக்கு வலியுறுத்த வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயனிடமும் அப்துல் லத்தீப் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் உண்மையை மூடி மறைக்க ஐஐடி நிர்வாகம் தரப்பில் முரண்பட்ட தகவல்கள் தெரிவிக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள கல்லூரி நிர்வாகம், லத்தீப்பின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. தற்கொலை செய்துகொண்ட மாணவி, ஐஐடி நுழைவுத் தேர்வில் முதலிடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 5 பேர் ஐஐடி கல்லூரியில் தற்கொலை செய்துகொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மாணவி பாத்திமா தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் நீதிவேண்டி, கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பினர் ஐஐடியை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடத்தினர்.