ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு விசாரணை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றம் செய்யப்படுவதாக காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப். இவர் சென்னை ஐஐடி வளாகத்தில் சராவியு பெண்கள் விடுதியில் தங்கி, முதலாம் ஆண்டு எம்.ஏ. படித்து வந்தார். இவர் கடந்த 8ஆம் தேதி இரவு 12.00 மணிக்கு தனது அறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தற்போது பூதாகரமாகியுள்ளது.
இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சென்னை ஐஐடிக்கு வருகை தந்து, மாணவி தற்கொலை சம்பவம் தொடர்பாக நேரில் விசாரணை நடத்தினார். பேராசிரியர்கள் உள்ளிட்ட பல தரப்பினரிடம் சுமார் இரண்டு மணி நேரம் அவர் விசாரணை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, ஏ.கே.விஸ்வநாதன், மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றம் செய்யப்படுவதாக தெரிவித்தார். அனுபவமுள்ள அதிகாரிகள் கொண்ட விசாரணைக் குழு இதனை விசாரிக்கும் என அவர் தெரிவித்தார்.