தமிழ்நாடு

வைகை அணையில் பணக்கார விவசாயிகளுக்கு தண்ணீர் திறப்பா?: அதிகாரிகள் விளக்கம்

வைகை அணையில் பணக்கார விவசாயிகளுக்கு தண்ணீர் திறப்பா?: அதிகாரிகள் விளக்கம்

rajakannan

வைகை அணையில் இருந்து இரவு நேரங்களில் பணக்கார விவசாயிகளுக்கு தண்ணீர் திறக்கப்படுவதாக எழுந்த புகாருக்கு மதுரை மண்டல பொதுப்பணித் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் இருந்து 8 கி.மீ. தூரத்தில் வைகை அணை உள்ளது. இந்த அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்கள் பாசன வசதி பெறுகிறது. அதோடு குடிநீருக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது. 

இதனிடையே, வைகை அணையில் இருந்து பெரு விவசாயிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை 100 கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்படுவதாக விவசாயிகளுக்கு தெரிய வந்துள்ளது.  பெரு விவசாயிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு இரவு நேரத்தில் அதிகாரிகள் தண்ணீர் திறப்பதாக விவசாயிகளின் புகாரின் அடிப்படையில், ஆதாரத்துடன் புதிய தலைமுறையில் செய்தி ஒளிபரப்பாகியது.

இந்நிலையில், வைகை அணையில் இருந்து இரவு நேரங்களில் தண்ணீர் திறக்கப்படுவதாக எழுந்த புகாருக்கு மதுரை மண்டல செயற்பொறியாளர் சுப்பிரமணி மறுப்பு தெரிவித்துள்ளார். மதகுகளை இயக்கி சரிபார்த்த போது சிறிது நீர் வெளியேறியதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள 45,041 ஏக்கர் நிலங்கள் பயன்பெறுவதற்காக வைகை அணையை 1-ந்தேதி திறக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.