10 வயது சிறுமி கொலை குறித்து ஐஜி ரம்யா பாரதி விளக்கம் pt
தமிழ்நாடு

10 வயது சிறுமி கொலை | வன்கொடுமை செய்தது உறுதி.. அதிர்ச்சி வாக்குமூலம்! ஐஜி ரம்யா பாரதி விளக்கம்!

கோவையில் 10 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது..

Rishan Vengai

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில், அண்டை வீட்டாரான கார்த்தி சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது சிசிடிவி மற்றும் வாக்குமூலத்தில் உறுதி. அவருக்கு உதவிய மோகன்ராஜ் உடன் இருவரும் 24 மணி நேரத்துக்குள் கைது செய்யப்பட்டதாக ஐஜி ரம்யா பாரதி விளக்கம் அளித்தார்; போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை சூலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த 21ஆம் தேதி காணாமல் போனதாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், கண்ணம்பாளையம் பகுதியில் குளக்கரையில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் கொண்டு மேற்கொண்ட விசாரணையில் கார்த்திக், மோகன்ராஜ் என்ற 2 பேரைப் பிடித்தனர்.

பாலியல் வன்கொடுமை

இரண்டு பேரிடமும் மேற்கொண்ட விசாரணையில், சிறுமியின் அண்டை வீட்டில் வசிக்கும் 33 வயது இளைஞர் கார்த்தி என்பவர் சிறுமியை கடத்தி சென்று கொலை செய்தது வாக்குமூலம் மற்றும் சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதியானதாக காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கார்த்திக்கு உதவியதாக இருந்த அவரது நண்பர் மோகன்ராஜ் என்பவரையும் கைதுசெய்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். இதனையடுத்து உறவினர்களிடன் நீண்ட நேர போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கோவை மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி குற்றச்சம்பவம் குறித்து விளக்கம் அளித்தார்.

வன்கொடுமை செய்யப்பட்டது உறுதி..

செய்தியாளர்களிடம் பேசிய கோவை மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி, “சிறுமியின் குடும்பத்திற்கு பழக்கமான அண்டை வீட்டு நபர் சிறுமியை அழைத்து சென்றது உறுதி செய்யப்பட்டது. குற்றவாளி கார்த்தியை காவல்துறையினர் சுற்றி வளைத்தபோது, மேல்மாடியில் இருந்து அவர் குதித்து தப்பிக்க முயன்றபோது அவருக்கு வலது கை மற்றும் வலது காலில் முறிவு ஏற்பட்டது.

பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.. விசாரணையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

முதல் தகவல் கிடைத்தவுடன் காவல்துறை மேற்கொண்ட துரித நடவடிக்கை மற்றும் தயார் நிலை காரணமாக 24 மணி நேரத்திற்குள் வழக்கின் குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டனர். 5 தனிப்படைகள் அமைத்து சிறுமியை தேடும்பணி தீவிரப்படுத்தப்பட்டது. 250 சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு, 24 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான கார்த்தி மற்றும் மோகன்ராஜ் மீது போக்சோ வழக்கின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என விளக்கம் கொடுத்துள்ளார்.