வடமாநில இளைஞர் மீது தாக்குதல் குறித்து ஐ.ஜி அஸ்ரா கார்க் விளக்கம் web
தமிழ்நாடு

வட இந்தியர் என்பதால் தாக்குதல் நடத்தப்பட்டதா..? என்ன நடந்தது? - ஐ.ஜி அஸ்ரா கார்க் விளக்கம்

திருத்தணியில் ஒடிசாவை சேர்ந்த 19 வயது இளைஞரை சுமார் 17வயதுதக்க 4 சிறார்கள் ஒன்றாக சேர்ந்து கத்தி, அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது..

PT WEB

கொலைவெறி தாக்குதல்

நேற்று முன்தினம் திருத்தணியில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சூரஜ் (19) என்ற இளைஞரை, நான்கு இளஞ்சிறார்கள் கத்தி மற்றும் அரிவாளால் கொடூரமாக தாக்குதல் நடத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு இளஞ்சிறார்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமாநில இளைஞர் மீது தாக்குதல்

கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்ட ஒடிசா மாநிலம், Kalahandi மாவட்டத்தைச் சேர்ந்த சூரஜ் என்ற இளைஞர் திருவள்ளூர் மருத்துவமனையில் இருந்து நேற்று ஆம்புலன்ஸ் மூலமாக மேற்சிகிச்சைக்கு, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

சொந்த ஊருக்கே சென்ற இளைஞர்

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வேளையில் மருத்துவர்களிடம் தாக்குதலுக்கு உள்ளான இளைஞர், தான் தனது சொந்த ஊருக்கே செல்ல வேண்டும் எனக் கூறி அழுது தன்னை விடுவிக்குமாறு மருத்துவர்களிடம் கெஞ்சியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து எந்த வழக்கில் இவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற விபரம் அறியாததால், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சூரஜ் என்ற இளைஞரிடம் கையெழுத்து வாங்கிவிட்டு அனுப்பி வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அங்கிருந்து வெளியேறிய இளைஞர் சூரஜ், தான் ஒடிசா செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

தமிழகத்தையே அதிச்சிக்குள்ளாக்கிய சம்பவத்தில் பாதிப்புக்குள்ளான இளைஞர் இந்தமுறையில் சென்றுவிட்டதாக சொன்னது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஐ.ஜி அஸ்ரா கார்க் விளக்கம்

திருத்தணியில் வடமாநில இளைஞர் தாக்குதலுக்கு உள்ளான விவகாரம் தொடர்பாக ஆலந்தூரில் வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், கடந்த 27 ஆம் தேதி ஒரு அசம்பாவித சம்பவம் நடைபெற்றுள்ளது, பாதிக்கபட்ட நபர் தமிழகத்திற்கு புலம்பெயர் தொழிலாளியாக வேலைக்கு வரவில்லை, இங்கு அவர் வேலை செய்யவில்லை. 2 மாதத்திற்கு முன்பு அவர் இங்கு வந்துள்ளார், சென்னையை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பயணம் செய்துள்ளார்.

அஸ்ரா கார்க்

அப்படி 27 ஆம் தேதி ரயிலில் செல்லும் நேரத்தில்தான் இந்த 4 இளைஞர்கள் அவரை தாக்கி உள்ளனர், மிரட்டி ரயிலில் இருந்து இறக்கி திருத்தணியில் பட்டா கத்தியால் அடித்து வீடியோ எடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பாக உடனடியாக போலீசார் அங்கு சென்று பாதிக்கபட்ட நபரை மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர்.

காவல்துறை சார்பில் உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டது ,109 BNS கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு 28 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். பின்னர் நீதிமன்ற உத்தரவுபடி 3 பேர் சிறார் இல்லத்தில் அடைக்கப்பட்டனர், ஒருவர் பெற்றோருடன் அனுப்பப்பட்டுள்ளார். 2 பட்டா கத்தி மற்றும் தொலைபேசி கைப்பற்றப்பட்டுள்ளது.

வட மாநிலத்தவர் என்பதால் தாக்குதல் நடத்தப்பட்டதா?

அதேபோல பாதிக்கபட்ட நபர் மொழி தெரிந்த ஒரு ஓய்வு பெற்ற அதிகாரியை அழைத்து பேசி புகாராக பெறப்பட்டுள்ளது,மேலும் பாதிக்கபட்ட நபர் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கையெழுத்து போட்டு விட்டு தன் சொந்த ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு புறப்பட்டுள்ளார், அவர் தற்போது நன்றாக இருக்கிறார், நாங்கள் அங்குள்ள மருத்துவர்களிடம் பேசினோம்..

மேலும் வட மாநிலத்தவர் என்பதால் தாக்குதல் நடத்தப்பட்டது என கூறுவது தவறு, முறைத்து பார்த்ததால் இந்த சம்பவத்தை செய்ததாக விசாரணையில் தாக்குதல் நடத்திய இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் அதிகமாக இருக்கூடிய இடங்களில் இது போன்று தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை, சிறு சிறு சம்பவம் ஒன்று இரண்டு நடைபெற்றாலும் அவற்றின் மீது உடனுக்கு உடன் நடவடிக்கை எடுத்து வருகிறோம். வட மாநிலத்தை சார்ந்தவர் என்பதால் தாக்குதல் நடத்தப்படவில்லை என தெரிவித்தார்.

போதையில் தான் இதை செய்தார்களா?

தாக்குதல் நடத்திய நபர்கள் போதை காரணமாக தாக்குதல் நடத்தியாக தற்போது வரை உறுதி செய்யப்படவில்லை, அது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

போதை பொருட்களை காவல்துறை தொடர்ந்து கைப்பற்றி வருகிறது. சமீபத்தில் கூட ஒடிசா மற்றும் ஆந்திரா வரை சென்று 1000 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு, அதை கொண்டு வரும் நபர்களை காவல்துறை கைது செய்தனர்.,திருவள்ளூரில் மட்டும் இந்த ஆண்டில் 102 கிலோ கஞ்சா, 447 மெத்தபெட்டமெயின், TABENTADOL மாத்திரைகள் 51 ஆயிரத்து 95 கைப்பற்பட்டுள்ளது.

சமூக வலைதளங்கள் கண்காணிக்கப்படுகிறது?

சமூக வலைதளங்களில் இளைஞர்கள் போதை பொருட்கள் மற்றும் பட்டா கத்தி வைத்து வீடியோ போடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் இதை காவல்துறை கண்காணிப்பு செய்து வருகிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், காவல்துறை தொடர்ந்து சமூக வலைதளங்களில் இளைஞர்கள் அப்லோட் செய்யும் வீடியோவை கண்காணித்து வருகிறது. இந்த ஒரு விசயம் தான் உங்களுக்கு தெரியவந்துள்ள, பல வருடங்களாக சமூகவலைதளத்தில் வீடியோ அப்லோட் செய்யப்படுவது கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொடக்க காலத்திலேயே அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, அவர்கள் சிறார்கள் என்றால் பெற்றோர்களை அழைத்து பேசுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம் என தெரிவித்தார்.