ஈரோட்டில் வாக்காளர்களை அடைத்து வைத்தால் வேட்பாளரை அழைத்துச் சென்று அங்கேயே ஆதரவு கேட்பேன் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்சரித்தார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருங்கல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இதுவரை இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடக்காத விதமாக திமுகவினர் வாக்காளர்களை ஆடு மாடுகளை போல் அடைத்து வைத்துள்ளனர்.
அப்படி வாக்காளர்களை அடைத்து வைத்து விட்டால் அதிமுக வெற்றியை தடுத்து நிறுத்த முடியுமா இனி எந்த பகுதியில் வாக்காளர்களை அடைத்து வைத்தாலும் வேட்பாளரை அழைத்துக் கொண்டு அங்கேயே சென்று வாக்கு சேகரிப்பேன். ஆட்சிக்கு வரும் முன் ஒரு பேச்சு வந்தபின் ஒரு பேச்சு இதுதான் திமுக ஆட்சி கடலில் பேனா வைப்பதை தவிர திமுக ஆட்சியில் எந்த ஒரு பெரிய திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களை முடக்கிவிட்டனர். கடலில் பேனா வைப்பதற்கு பதிலாக ஏழை குழந்தைகளுக்கு பேனா வாங்கிக் கொடுத்தால் கூட புண்ணியம் சேறும்.
பொங்கல் பரிசை கூட போராடி தான் பெற வேண்டிய நிலை திமுக ஆட்சியில் இருக்கிறது. விவசாயிகள் போராட்டம் நடத்திய பின்னரே பொங்கல் பரிசு தொகுப்பில் செங்கரும்பு வழங்கப்பட்டது. 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த கனிமொழி ராசா ஆகியோர் சிறை சென்றனர்.
கடந்த ஐந்து நாட்களில் 25 கொலைகள் பல்வேறு மாவட்டங்களில் நடந்துள்ளது. திமுக ஆட்சியில் மக்களுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. கல் எரிபவர், கை வெட்டுவேன் என்பவகள் எல்லாம் பெரும் பதவிகளில் இருப்பதால்தான் தமிழகத்தில் ரவுடிகள் அதிகரித்து விட்டனர். எது கிடைக்கிறதோ இல்லையோ தமிழகத்தில் கஞ்சா தாராளமாக கிடைக்கிறது என குற்றம் சாட்டினார்.