தமிழ்நாடு

“ஆளுநராக நான் இதையெல்லாம் செய்திருக்கிறேன்”.. முரசொலி கட்டுரைக்கு தமிழிசை காட்டமான அறிக்கை

ச. முத்துகிருஷ்ணன்

ஆட்சிப்பணியோடு மாநில முதலமைச்சர் வேந்தர் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டால் அது கட்சிப்பணி ஆகிவிடும் என்று முரசொலி விமர்சனத்துக்கு தமிழிசை காட்டமான அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஆளுநர்கள் பற்றிய தமிழிசையின் கருத்து குறித்து முரசொலி பத்திரிக்கையில் வெளியான விமர்சனத்திற்கு புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பதிலளித்துள்ளார். “ஆளுநர்கள் வேந்தர்களாக பல்கலைக்கழகங்களை மேம்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்று நான் கூறியது என் அனுபவத்தை வைத்துதான். ஆளுநர்கள் ஆக்கபூர்வமாகதான் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள்” என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ள தமிழிசை தெலுங்கானா ஆளுநராக வேந்தர் பொறுப்பிலிருந்து தெலுங்கானா பல்கலைக்கழகங்களை மேம்படுத்த அவர் மேற்கொண்ட பணிகளையும் பட்டியலிட்டுள்ளார்.

1. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 12 பல்கலைக் கழகங்களில் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாக இருந்த துணைவேந்தர் பதவிகள் தனது சீரிய முயற்சிக்குப் பின் நிரப்பட்டதாக தமிழிசை கூறியுள்ளார்.

2. புதிய கல்வி கொள்கை அறிமுகம் பற்றிய விவாதங்களையும்,விழிப்புணர்வையும் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் ஏற்படுத்தியது.

3. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பல்கலைக்கழகங்களுக்கும் 3 மணி நேரம் ஒதுக்கி அனைத்து பல்கலைக்கழகங்களையும் 1 மாத காலம் ஆய்வு செய்து பல்கலைக்கழகங்களின் தேவைகள், குறைகள் மற்றும் சாதனைகளை பட்டியலிட்டு அதன் அறிக்கைகளை உயர்கல்வி துறைக்கும், முதலமைச்சருக்கும் அனுப்பி வைத்தது.

4. பல்கலைக்கழகங்களை தரவரிசைப்படுத்தும் பெங்களூர் NAAC சென்டருக்கு நேரடியாக சென்று தெலுங்கானா பல்கலைக்கழகங்களின் தர ஆய்வறிக்கையை நேரடியாக பெற்று தெலுங்கானா முதலமை‌ச்ச‌ருக்கு அனுப்பி வைத்து பல்கலைக்கழகங்களை மேம்படுத்த முன்னின்றது.

5. கொரோனா முதல் அலையின் போது மாணவர்களின் கற்றல் தடைபடாத வண்ணம் நாட்டிலேயே முன்னோடியாக அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஆன்லைன் வகுப்புகளை ஆரம்பித்து வைத்தது.

6. அனைத்து பல்கலைக்கழகங்களிலும் முன்னாள் மாணவர்களின் பட்டியலை எடுத்து பல்கலைக்கழகங்கள் முன்னாள் மாணவர்களுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்தி பல்கலைக்கழகங்களின் வளர்ச்சி பணிகளில் ஈடுபடுத்தி முன்னெடுத்துச் செல்வது.

7.பல்கலைக்கழகங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்து பணியிடங்களை நிரப்பச்செய்தது.

8. தெலுங்கானா அரசு பல தனியார் பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க முனைப்பு காட்டியபோது அதன் தரங்களை ஆராய்ந்த பின்னரே சில தனியார் பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டது.

9. அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் ஆளுநரின் ஒப்புதல் எந்த வித அரசியல் தலையீடு இன்றி அரசாங்கம் அமைத்த தேர்வுக்குழு அங்கீகரித்த நபர்களையே துணை வேந்தர்களாக நியமித்தது அனைவராலும் வரவேற்கப்பட்டது.

10.பெண்களுக்கான கல்வி, முன்னேற்றம் அவர்களுடைய பொழுதுபோக்கு மற்றும் பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியாக உடல் நலம் பேணும் குறிப்பேடு பராமரிக்க பட வேண்டும் என்று உத்தரவிட்டது.

11.பல்கலைக்கழகங்களுக்குள் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தியது. வெளிமாநில மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட துணை நின்றது.

12. முதன் முறையாக பல்கலைக்கழகங்களை மாணவர்களுடன் காணொளி காட்சியின் வாயிலாக குறைகளை கேட்டறிவதற்கான "Chancellor connect" என்ற இணைய வழி நிகழ்ச்சியில் மாணவர்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றிற்கு தீர்வு காண்பது.

13. 30-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் மற்றும் அனைத்து பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாவிலும் தவறாமல் கலந்து கொண்டது போன்ற இவ்வளவு பணிகளையும் செய்ததாக தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.

“கடந்த 40 ஆண்டுகளில் நாட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற தனி நபர் தவறுகளையும் பட்டியலிட்டு எல்லா ஆளுநர்களும் தவறு செய்வதை போன்ற ஒரு தோற்றத்தை கற்பிக்க முயற்சிப்பது தவறான முன்னுதாரணம். ஆளுநர்களை பற்றி நீங்கள் கூறிய தவறுகளும் குற்றச்சாட்டுகளும் அமைச்சர்கள் தொடங்கி சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் பல பிரபலங்கள் மீது பல குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு இருகின்றன. அதனால் மாநிலத்தில் அரசியல் சாசனத்தை கண்காணிக்கும் ஆளுநர்களே வேண்டாம் என்பது எந்த விதத்தில் நியாயம்?

ஆளுநர்கள் பல்கலைக்கழக பணிகளை வேந்தர்களாக எந்த வித விருப்பு, வெறுப்பின்றி முதலமை‌ச்ச‌ருக்கு தோளோடு தோள் நின்று கல்வி பணியாற்றுவதே சாலச்சிறந்தது. பல்கலைக்கழக நிர்வாகத்தையும் மாநில முதலமைச்சரே ஏற்றுக்கொண்டால் ஏற்கனவே இருக்கும் ஆட்சி பணியோடு வேந்தர் பணியையும் ஏற்றுக்கொண்டால் அதுவும் கட்சி பணி ஆகி விடும் என்ற வகையில் மாணவர்களுக்கு வழிகாட்டியாக ஆளுநர்கள் வேந்தர்களாக செயலாற்றுகிறார்கள். இது அரசியலமைப்பு சட்டப்படி காலங்காலமாக ஆளுநர்களுக்கு அளிக்கப்பட்ட உரிமையாகும்.

இது மாற்றப்பட்டால் பல்கலைக்கழக நியமனங்களும் அரசியல் சார்ந்ததாக ஆகி விடும். எனவேதான் அரசியலமைப்பு சட்டம் பல பிரிவுகளையும்,கண்காணிக்கும் கடமையையும் ஆளுநர்களுக்கு வழங்கி இருக்கிறது. என்னை பொருத்தமட்டில் ஆளுநர்கள் ஆக்கப்பூர்வமான வேந்தர்களாக செயலாற்றுவதை வேண்டுமென்றே சிலர் அரசியலாக்கி வருகிறார்கள் என்பதே எனது கருத்து. வேறு மாநிலத்தின் ஆளுநராக இருந்தாலும் தமிழகத்தை பொருத்தமட்டில் தமிழகத்தின் மகளாக சில நியாயமான கருத்துக்களை தெரிவிக்க உரிமை உள்ளது என்று எண்ணுகிறேன்” என்று தமிழிசை செளந்தரராஜன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.