உயர் அதிகாரிகள் தொடர்ந்து ஒரே இடத்தில் 20 ஆண்டுகளாக பணிபுரிந்தால் எப்படி நிர்வாகம் நேர்மையாக நடைபெறும்? இது பெரியளவிலான மோசடிக்கு வழிவகை செய்யும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
நாகர்கோவில் பொதுப்பணித்துறை கோதையாறு வடிநில கோட்டத்தில் உதவி செயற்பொறியாளராகப் பணிபுரிந்து வருபவர் தனராஜ். இவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “தனக்கு புதிய குடியிருப்பு ஒதுக்கும் வரை, நாகர்கோவில் ஆட்சியர் பங்களா அருகேயுள்ள பொதுப்பணிக் குடியிருப்பில் குடியிருக்க அனுமதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், “இந்த வழக்கு விசாரணையின் போது மனுதாரர் மற்றும் எதிர் மனுதாரர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை பார்க்கையில் நாகர்கோவில் பொதுப்பணித்துறை கோதையாறு வடிநில கோட்டத்தில் ஏராளமான முறைகேடுகள், சட்டவிரோத செயல்கள், ஊழல்கள் நடைபெற்றிருப்பது தெரிகிறது.
மனுதாரர் 1986-ல் பொதுப்பணித்துறையில் உதவி பொறியாளராக பணியில் சேர்ந்துள்ளார். தற்போது உதவி செயற்பொறியாளராக உள்ளார். இவருக்கு பொதுப்பணித்துறை குடியிருப்பு ஒதுக்கப்படவில்லை. இருப்பினும் 4 ஆண்டுகளாக சட்டவிரோதமாக பொதுப்பணித்துறை குடியிருப்பில் வாடகை வழங்காமல் குடியிருந்துள்ளார்.
உதவி செயற்பொறியாளர் நிலையில் பணிபுரியும் ஒருவர் சட்டப்பூர்வ ஒதுக்கீடு பெற்று உயர் அதிகாரிகளின் ஒப்புதலுடன் குடியிருப்பில் வசிக்க வேண்டும் என்பதை தெரிந்திருக்க வேண்டும். முறையாக ஒதுக்கீடு பெறாமல் எந்த ஒரு அதிகாரியும் அரசு குடியிருப்பை ஆக்கிரமிக்கக்கூடாது. இதனால் புதிய குடியிருப்பு ஒதுக்கும் வரை அவரை தற்போதைய குடியிருப்பில் குடியிருக்க அனுமதிக்க முடியாது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறையில் உதவி செயற் பொறியாளர், கண்காணிப்பாளர், இளநிலை உதவியாளர்கள், செயற் பொறியாளர்கள் தொடர்ந்து 20 ஆண்டுகளாக அதே மாவட்டத்தில் பணிபுரிந்து வருவது தெரிகிறது. உயர் அதிகாரிகள் தொடர்ந்து ஒரே இடத்தில் 20 ஆண்டுகளாக பணிபுரிந்தால் எப்படி நிர்வாகம் நேர்மையாக நடைபெறும்? இது பெரியளவிலான மோசடிக்கு வழிவகை செய்யும்.
மனுதாரர் குமரி கோதையாறு வடிநில கோட்ட பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் மற்றும் தாமிரபரணி வடிநில கோட்ட கண்காணிப்புப் பொறியாளர் மீது பல்வேறு ஊழல் புகார்களை தெரிவித்துள்ளார். இப்புகார் மீது பொதுப்பணித்துறை முதன்மை செயலர் நடவடிக்கை எடுக்காமல் உள்ளார். எனவே பொதுப்பணித்துறையில் கோதையாறு வடிநில கோட்ட செயற் பொறியாளர் அலுவலகம், தாமிரபரணி வடிநில கோட்டம் கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் நீ்ண்ட நாட்களாக பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்களை கண்டறிந்து அவர்களை வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்ய பொதுப்பணித்துறை முதன்மை செயலரும், தலைமை பொறியாளரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செயற்பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர் ஆகியோர் மீது மனுதாரர் அளித்துள்ள ஊழல் புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு பொதுப்பணித்துறை முதன்மை செயலர் பரிந்துரைக்க வேண்டும். இதனை 4 வாரத்தில் முடிக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.