சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் சில ஆண்டுகளில் அதிக நெருக்கடியை சந்திக்கும் என்பதால் 2 ஆவது விமான நிலையம் அமைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. நீண்ட கால படிநிலைகளுக்குப்பிறகு பரனுர், பரந்துர் உள்ளிட்ட இடங்கள் பரிந்துரைக்கப்பட்டன. இவற்றில் சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்க பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது.
கடந்த திமுக ஆட்சியில் அந்த விமான நிலையத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் அங்கு விமானநிலையம் அமைக்க அப்பகுதியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த சூழலில், புதிதாக கட்சி தொடங்கிய விஜய் பரந்தூர் சென்று அந்த மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்தார்.
தொடர்ந்து அவர் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், பரந்தூர் விமான நிலையதிட்டத்தை கைவிடுவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதனைத் தொடர்ந்து திமுகவுக்கு நெருக்கமான G Square நிறுவனம் பரந்தூர் பகுதியில் நிலம் வாங்கியுள்ளதாகவும், அதனால்தான் பரந்தூர் விமான நிலையதிட்டத்தை கைவிடுவதற்கு திமுக எதிர்ப்பு தெரிவிக்கிறது என்றும் சமூக வலைத்தளங்களில் விவாதம் எழுந்துள்ளது. அதோடு இந்த விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் நிர்மல்குமார் பேசியபோது, “G Square மாப்பிள்ளை” என பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு இதே போன்று தன் மீதான விமர்சனங்களை முன்வைத்து G Square நிறுவனம் வெளியிட்டுள்ள OFFER இணையத்தில் வருகிறது. கடந்த ஆண்டும் பரந்தூர் விமான நிலையத்தை முன்வைத்து G Square நிறுவனம் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. அப்போது சுபா என்ற எக்ஸ் தள பயனாளி, G Square நிறுவனம் மீது விமர்சனங்களை முன்வைத்தபோது, அதற்கு G Square நிறுவனம் அளித்த பதிலில், G Square பரந்தூரில் எந்த நிலத்திற்கும் சொந்தக்காரர் அல்ல, அப்பகுதியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகள், திட்டங்கள் அல்லது பிற செயல்பாடுகளுடன் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று கூறப்பட்டிருந்தது.
மேலும் ,பரந்தூரில் G Square நிறுவனத்துக்கு நிலம் சொந்தம் என்று யாரேனும் கூறினால், அந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்க உண்மையான, சட்டப்பூர்வமாக சரிபார்க்கக்கூடிய ஆவணங்களை வழங்கவேண்டும் என்றும், அப்படி யாரும் நிரூபித்தால் சம்பந்தப்பட்ட நிலத்தை 1 ரூபாய்க்கு மாற்றித் தர G Square தயாராக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தற்போது பரந்தூர் விவகாரம் மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், G Square நிறுவனத்தின் பதிவு வைரலாகி வருகிறது.