எல்லோருக்கும் எல்லாம் நிகழ்ச்சியில் எம்.பி ஆ.ராசா உரை
எல்லோருக்கும் எல்லாம் நிகழ்ச்சியில் எம்.பி ஆ.ராசா உரை ட்விட்டர்
தமிழ்நாடு

“பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்புச் சட்டம் இருக்காது” – எம்.பி ஆ.ராசா அச்சம்

webteam

செய்தியாளர்: ஐஷ்வர்யா

கோவையில் ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற பெயரில் ‘திராவிட மாடல் நாயகரின் பிறந்தநாள்’ மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட எம்பி ஆ.ராசா பேசுகையில்...

“பெரியார், அண்ணா இருந்தபோது அந்த ஆபத்தில்லை. கலைஞர் இருந்தபோது அந்த ஆபத்து வேறு ஒரு உருவில் அரசியலாக வந்தது. அதனால் வேறு வழியில்லாமல் பாஜகவுடன் சென்றோம். வாஜ்பாய் என்ற ஜனநாயகவாதி இருந்தார்.

அவர்களின் ஒரு கொள்கை பிடிக்காமல் இருந்தாலும், ‘எல்லாரும் சமம்’ என்ற கொள்கைக்காக போராடினோம். அது என்ன கொள்கை தெரியுமா? பாஜக-வின் மூலாதார கொள்கைகளான, ‘பாபர் மசூதியை இடித்து ராமர் கோவில் கட்ட வேண்டும், காஷ்மீருக்கு வழங்கப்பட்ட 370 பிரிவை ரத்து செய்ய வேண்டும், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் என ஒரே சட்டம்’ ஆகிய 3 விஷயங்களையும் முடக்கி, உங்க சேட்டையெல்லாம் காட்டக்கூடாது என கையெழுத்து வாங்கிக் கொண்டுதான் கூட்டணியின் உள்ளே போனது திமுக.

நாடாளுமன்றத்தில் ஜெய் ஶ்ரீ ராம் என பாஜக உறுப்பினர்கள் கோஷமிட்ட போது, நாங்கள் பெரியார் வாழ்க என்றோம். பாஜகவில் உள்ள எல்லா எம்.பி. பெயரிலும் சாதி உள்ளது. நரேந்திரன் என்பது பெயர், மோடி என்பது சாதி. அனைவரிடத்திலும் சாதி உள்ளது. ஆனால், தமிழக எம்.பி-க்கள் 38 பேர் பெயரிலும் சாதி இல்லை.

ராமர் கோவில் கட்டினால் தேசியம் என்று எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? மதம் தேசியம் என்றால், போப்பாண்டவர்தான் பிரதமர். இந்து மதம் இந்தியாவில் மட்டும்தான் இருக்கு. ஆனால், கிறிஸ்துவம் அனைத்து நாடுகளிலும் உள்ளதால் போப்பாண்டவர் உலக நாடுகளுக்கு பிரதமர்.

மதம் தேசியம் என்றால் பாகிஸ்தான், வங்காளம் ஏன் பிரிந்துள்ளது? பிரதமர் மோடி, பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் என அனைவருக்கும் இது தெரியும். இருந்தும்கூட ஏன் இப்படி பேசுகிறார்கள்? ஏனென்றால் பிழைப்பு நடத்த வேண்டும், அரசியலில் பதவிக்கு வர வேண்டும்.

ramar temple

அதிகாரம் எவ்வளவு வலிமையானது? அனைத்து சாதியினரையும் அதிகாரத்திற்கு கொண்டு வந்ததற்கு காரணம் திமுக. நியாயமாக பெண்கள் பேரணியாக சென்று பல்லடத்தில் பிரதமரை ‘மனிதனா நீங்கள்?’ என கேட்டிருக்க வேண்டும். பாஜக

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்புச் சட்டம் இருக்காது, இந்தியா இருக்காது. அதனால் தமிழ்நாடு தனியாக போய்விடும், இதை விரும்புகிறதா இந்தியா என கேட்டு சொல்லுங்கள்” என்று பேசினார்.