அமமுக தலைமையை ஏற்றால் அதிமுக - பாஜகவுடன் கூட்டணி பற்றி பேசத் தயார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகர் இல்லத்தில் சசிகலாவை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், “திமுகவை எதிர்க்கும் எந்தக் கட்சியாக இருந்தாலும் அமமுக தலைமையை ஏற்றுக்கொண்டால் கூட்டணி பேசத் தயார். அமமுக தலைமையை பாஜக, அதிமுக ஏற்காது. ஒருவேளை ஏற்றுக்கொண்டால் அதிமுக- பாஜகவுடன் கூட்டணி பற்றி அமமுக பேசத் தயார். மத்திய பட்ஜெட் உள்ளிட்டவை தொடர்பாக மத்திய அரசை விமர்சித்துதான் வருகிறேன். கூட்டணி பற்றி சில கட்சிகளுடன் பேசி வருகிறோம். கூட்டணி முடிவானதும் அறிவிப்போம். எங்களின் ஒரே இலக்கு திமுக ஆட்சியை வரவிடாமல் தடுப்பதுதான்” எனத் தெரிவித்தார்.