தமிழ்நாடு

‘இந்த மாதிரி மணப்பெண்தான் வேண்டும்’: சப்-கலெக்டர் ஆசைக்கு ஓகே சொன்ன பெண்

Rasus

கிராம மக்களுக்கு தன்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என்ற கனவோடு இருந்த சிவகுரு ஐஏஎஸ் அதற்கேற்ப மணப்பெண்ணை தேடியிருக்கிறார்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள ஒட்டங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுரு. வறுமையான பின்னணியை கொண்ட குடும்பமாக இருந்தாலும், தனது கடின உழைப்பு மற்றும் தொடர் முயற்சி மூலம் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தார்.

கிராமப் பின்னணியில் வளர்ந்தவர் என்பதால் எப்போதுமே கிராம மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் தொடர்ச்சியாக இருந்து வந்துள்ளது. தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் துணை ஆட்சியராக (பயிற்சி) பணிபுரிந்து வரும் அவருக்கு பெற்றோர் வரன் தேட ஆரம்பித்தனர்.

அப்போது தனக்கு வரப்போகும் பெண் எப்படி இருக்க வேண்டும் என்ற தன் ஆசையை பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார் சிவகுரு. அதாவது தான் திருமணம் செய்துகொள்ளப் போகும் பெண், தான் ஊருக்கு செல்லும் நேரத்தில் அங்குள்ள கிராம மக்களுக்கு மருத்துவம் பார்த்தால் சிறப்பாக இருக்கும் எனக் கூறியிருக்கிறார். அத்துடன் கிராம மக்கள் மத்தியில் மருத்துவ முகாம் போன்றவை நடத்தும் பெண்ணாக இருந்தால் சிறப்பாக இருக்கும் என தனது ஆசையை கூறியிருக்கிறார்.

அதன்படி வரன் தேடுகையில் சென்னையைச் சேர்ந்த டாக்டர் கிருஷ்ண பாரதி அதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார். கிருஷ்ண பாரதி விழுப்புரத்தில் மருத்துவம் பயின்றாலும் மற்றபடி வேலை செய்வதெல்லாம் சென்னைதான். ஆனால் கிருஷ்ண பாரதிக்கும் கிராம மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்ததால், சிவகுருவின் கோரிக்கைக்கு உடனடியாக ஒகே சொல்லிவிட்டார். அதன்படி தற்போது பெற்றோர், கிராம மக்கள் முன்னிலையில் சிவகுரு- கிருஷ்ண பாரதி திருமணம் சிறப்பாக நடைபெற்றிருக்கிறது.

100 சவரன் தங்க நகைகள் வேண்டும். ஒரு கார் வேண்டும் என வகைவகையாக வரதட்சணை கேட்பவர்கள் மத்தியில், தான் கிராம மக்களுக்கு ஏதாவது செய்ய பெண் வேண்டும் என்ற நோக்கில் சிவகுரு வரண் தேடி அதனை செய்தும் காட்டியிருக்கிறார். அவருக்கு கிராம மக்கள் தங்களது வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர்.