தமிழ்நாடு

“ராஜினாமாவை திரும்பப் பெறுங்கள் ஐஏஎஸ் சசிகாந்த்”- போராட்டத்தில் குதித்த ஊர் மக்கள்

Rasus

பதவி விலகுவதாக அறிவித்துள்ள ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் தனது முடிவை திரும்பப் பெற வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது. இதே கோரிக்கையை வலியுறுத்தி அவரது சொந்த ஊர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக மாநிலம் தக்ஷின் கன்னடா மாவட்டத்தின் துணை ஆணையராக இருந்தவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி சசிகாந்த் செந்தில். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இவர், துணை ஆணையர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சசிகாந்த் செந்திலின் இந்த முடிவு அவரது சொந்த ஊர் மக்களிடம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே சசிகாந்த் செந்தில் ராஜினாமா முடிவை திரும்பப்பெற்று அவர் மீண்டும் பணியில் சேர வேண்டும் என வலியுறுத்தி சொந்த ஊர் மக்கள் போராட்டம் நடத்தினர். சசிகாந்த் செந்தில், கிராமத்தில் அறிவுசார் புத்தகங்கள் அடங்கிய நூலகத்தை அமைத்ததோடு ஏராளமான மாணவர்கள் கல்வி பெற உதவியதாகவும் ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

தான் பணிபுரிந்த இடங்களில் எல்லாம் சிறப்பாக செயல்பட்டு மக்களின் மனங்களில் இடம்பிடித்தவர் சசிகாந்த் எனவும் கிராம மக்கள் கூறுகின்றனர். மாத்தூர் கிராம மாணவர்களுக்கு முன்மாதிரியாகவும் சசிகாந்த் செந்தில் திகழ்கிறார்.

கடந்த மாதம் கேரளாவைச் சேர்ந்த கண்ணன் கோபிநாதன் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பதவி விலகியபோதே அது நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் சசிகாந்த் செந்தில் போன்ற அதிகாரிகள் அரசுப் பணியிலிருந்து விலகக்கூடாது என்பதே மாத்தூர் கிராம மக்களின் எதிர்ப்பார்ப்பும், கோரிக்கையாகவும் உள்ளது.