John
John pt desk
தமிழ்நாடு

அயோத்தி பட பாணியில் சென்னை-அசாம்-நெல்லை: வடமாநிலத்தவர் மரணத்தில் நடந்த நெஞ்சை உலுக்கும் நிகழ்வுகள்!

PT WEB

அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டம் தோலா பகுதியை சேர்ந்தவர், ஜான் குஜூர். திருமணமாகாத இவருக்கு உடன்பிறந்தவர்களாக இரண்டு அண்ணன்களும் ஒரு தங்கையும் உள்ளனர். இந்நிலையில், தன் குடும்ப வறுமை காரணமாக அசாம் மாநிலத்தில் இருந்து சென்னை வந்த அவர், பட்டினப்பாக்கத்தில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்துள்ளார்.

ஜான் குஜூர்

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜான் குஜூரை சின்னம்மை நோய் தாக்கியுள்ளது. இதற்கான எந்த ஒரு மருத்துவ சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாமல் இருந்த அவர், நோய் முற்றிய பிறகு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 24.04.2023 அன்று உயிரிழந்தார்.

ராயப்பேட்டை மருத்துவமனை

இதையடுத்து அசாமில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளம் வயது மகன் வேலைக்குச் சென்ற இடத்தில் திடீரென இறந்ததாக வந்த செய்தி அவர்களுக்கு சந்தேகத்தை கொடுத்தபோதிலும், ஏழ்மையும் இயலாமையும் சேர்ந்து அக்குடும்பத்தை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இதைத் தொடர்ந்து அவர்கள் உடனடியாக தங்களின் தின்சுகியா மாவட்டத்தின் ஆட்சியர் ஸ்வ்ப்னீல் பாலிடம் விஷயத்தை விளக்கி, தங்களுக்கு உதவுமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

விஷயத்தின் தீவிரத்தை உணர்ந்த அந்த மாவட்ட ஆட்சியர், உடனடியாக தன்னுடன் (2008 ஐஏஎஸ் பேட்ஜில்) படித்துவிட்டு தமிழ்நாட்டில் பணிபுரியும் தன் நண்பரும் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளருமான ஐஏஎஸ் அதிகாரி சிவ.கிருஷ்ணமூர்த்தியை தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார். இதைத் தொடர்ந்து நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவ.கிருஷ்ணமூர்த்தி, சென்னையில் ராயப்பேட்டை மருத்துவமனையில் உடல்கூறாய்வு செய்யப்படாமல் இருக்கும் ஜான்குஜூர் குறித்து விசாரித்து உறுதிப்படுத்தி தின்சுகியா மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து உள்ளார்.

ராயப்பேட்டை மருத்துவமனையில் ஜான் குஜூர் உடல்

இதையடுத்து ஜான் குஜூரின் குடும்பத்தினர், மகனின் இறப்பை கடுமையான மனதுடன் ஏற்றுக் கொண்டுள்ளனர். பின் ஆட்சியரிடம், தங்களின் ஏழ்மையை விளக்கி, மகனின் உயிரற்ற உடலையாவது பெற்றுத்தரும்படி கேட்டுள்ளனர். இதைக்கேட்ட ஆட்சியர் விசாரித்துபார்த்தபோது, சென்னையில் வேலை பார்த்த ஜான் குஜூர் அனுப்பிய பணத்தில் தான் அசாமில் அக்குடும்பத்தினர் 5 பேரும் வாழ்க்கையை நடத்தி வந்தனர் என்பது தெரிய வந்துள்ளது.

ஜான் குஜுர்

இதைத்தொடர்ந்து ஆட்சியர் ஸ்வ்ப்னீல் பாலின் அறிவுறுத்தலின்பேரில், இறந்த ஜான் குஜூரின் உடலை சென்னையில் இருந்து 4000 கி.மீ தொலைவில் இந்திய சீன எல்லையில் இருக்கும் தோலா கிராமத்திற்கு பத்திரமாக அனுப்பிவைக்க சிவ.கிருஷ்ணமூர்த்தி ஏற்பாடு செய்துள்ளார்.

இதற்காக நெல்லை மாநகராட்சியுடன் இணைந்து பணியாற்றும் ஆர்.சோயா தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சரவணனை தொடர்பு கொண்ட சிவ.கிருஷ்ணமூர்த்தி, ஜான் குஜூர் உடலை விமானம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்ப தேவையான ஆவணங்கள் மற்றும் அதற்கான ஏற்பாடுகளை செய்ய அறிவுறுத்தி நடவடிக்கை எடுத்துள்ளார்.

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் ஐஏஎஸ் அதிகாரி சிவ.கிருஷ்ணமூர்த்தி

இதையடுத்து தன்னார்வலர் சரவணன், சென்னை சென்று விசாரிக்கையில், இறந்தவர் உடலை வேறு மாநிலத்துக்கு பிரேதத்தை விமானம் மூலமாக அனுப்பி வைக்க தேவையான ஆவணங்களான...

1.இறப்பு நிகழ்ந்த உள்ளூர் காவல் துறையிடமிருந்து NOC (காவல் முத்திரை கட்டாயம்)

2. பிரேத பரிசோதனை அறிக்கை.

3. தற்காலிக இறப்புச் சான்றிதழ் மீண்டும் மருத்துவரால் கையொப்பமிடப்பட்டு முத்திரையிடப்பட்டது

4. எம்பார்மிங் சான்றிதழ்

ஆகிய நான்கு ஆவணங்களும் தயார் செய்ய வேண்டியது முக்கியம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராயப்பேட்டை மருத்துவமனையில் ஜான் குஜூர் உடல்

அதன்படி முதலில் இறந்தவர் உடலை எம்பார்மிங் செய்ய வேண்டும். ஆனால், அந்த வசதி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இல்லை. இதையடுத்து மாநகராட்சி ஆணையாளர் சிவ.கிருஷ்ணமூர்த்தி, சம்பந்தப்பட்ட காவல் துறையினரிடம் பேசி, எப்ஐஆர் பதிவு செய்வதற்கும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை முதல்வரிடம் பேசி, உடற்கூறாய்வை உடனடியாக செய்வதற்கும், பின்பு அங்கிருந்து உடலை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் எம்பார்மிங் செய்வதற்கும் உதவியுள்ளார்.

இதைத் தொடர்ந்து எம்பார்மிங் செய்யப்பட்ட உடலை விமானத்தில் கொண்டு செல்வதற்கு ஏற்ப பேக் செய்து மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக் கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்துள்ளனர்.

ஒரே நாளில் அனைத்து ஆவணங்களை சேகரித்து, இறந்தவரின் உடலை விமானம் மூலம் அனுப்புவதற்கான அனைத்து பணிகளையும் செய்து முடித்துள்ளார் ஆணையாளர் சிவ.கிருஷ்ணமூர்த்தி. அவரோடு இந்த பணிக்கு நிதி உதவி அளித்தவர்கள் பெயர் கூற வேண்டாம் என தெரிவித்து விட்டார்கள்.

தன்னார்வலர் சரவணன்

முழு மூச்சாக நின்று ஒரே நாளில் உடலை அனுப்புவதற்கு உதவிய நெல்லை சேர்ந்த தன்னார்வலர் சரவணன் மற்றும் அவரது குழுவைச் சேர்ந்த திவ்யா, சென்னை கருணை உள்ளம் அமைப்பைச் சேர்ந்த அருள் மற்றும் தென்காசி பசி இல்லா தமிழகம் அமைப்பைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள்.

சமூக ஆர்வலர் திவ்யா

“ ‘அயோத்தி’ படம் வெளியானபோது, அதில் பேசப்பட்ட மனிதத்தை கண்டு நம்மில் எல்லோருமே நெகிழ்ந்திருப்போம். அப்படியான ஒரு சம்பவம்தான் இதுவும். படங்களைவிடவும், நிஜ வாழ்வில் இப்படியான நிகழ்வுகள் நடப்பதென்பது, மனிதத்தின் மீதான நம்பிக்கையை கொடுக்கிறது

இளைஞர் ஜான் குஜூர் மரணமென்பது, அவரது குடும்பத்துக்கு ஈடுசெய்யவே முடியாத பேரிழப்பு என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதேநேரம், அவர் மரணத்துக்குப்பின் அவரது குடும்பத்தினருக்கு உதவிய ஒவ்வொருவரும், பாராட்டுக்குரியவர்கள். ஏனெனில் இதுபோன்ற இழப்பு நேரங்களில், மனிதம் மட்டுமே ஒருவரை மனதளவில் பாதிப்பிலிருந்து கொஞ்சமேனும் மீட்க உதவும்” என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

மீண்டு வரட்டும் ஜான் குஜூரின் குடும்பம்!

- நெல்லை நாகராஜன், சங்கர்