தமிழ்நாடு

தந்தையின் கனவை நனவாக்குவேன் - காவல் ஆய்வாளர் பெரியபாண்டி மகன் உருக்கம்

rajakannan

ஐபிஎஸ் அதிகாரியாகி தந்தையின் கனவை நிறைவேற்றப்போவதாக, ராஜஸ்தான் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனின் மகன் ரூபன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொளத்தூரில் உள்ள முகேஷ்குமார் என்பவரின் நகைக் கடையில் மேற்கூரையை துளையிட்டு மூன்றரை கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுதொடர்பாக ராஜஸ்தானைச் சேர்ந்த நாதுராம், அவரது கூட்டாளிகள் தினேஷ் சவுத்ரி, பக்தாராம் ஆகியோரை கைது செய்ய, ராஜஸ்தானில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஆய்வாளர் பெரியபாண்டியன் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

காவலர் வீர வணக்க நாளையொட்டி, ராஜஸ்தான் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. திருவள்ளூர்‌ மாவட்டம் ஆவடியில் நடந்த நிகழ்ச்சியில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். 

பெரியபாண்டியனின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய விஸ்வநாதன், அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். பெரியபாண்டியனின் மகன்கள் ரூபன், ராகுல் ஆகியோருக்கு மடிக்கணினி மற்றும் மிதிவண்டி ஆகியவற்றையும் அவர் பரிசாக வழங்கினார். அதன்பின் புதிய தலைமுறைக்குப்‌ பேட்டியளித்த ரூபன், தன் தந்தையின் விருப்பப்படியே ஐ.பி.எஸ் அதிகாரியாகி மக்களுக்கு சேவையாற்றப்போவதாக கூறியுள்ளார்.