தமிழ்நாடு

சென்னை மாகாணம் மறு சீரமைப்பு... இன்று தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்

சென்னை மாகாணம் மறு சீரமைப்பு... இன்று தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்

webteam

தமிழ் மொழி எனும் உன்னத செல்வத்தை வளர்த்தெடுக்க தொடர்ந்து பாடுபடப்போவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1-ஆம் நாள் தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுகிறது. 1956 நவம்பர் முதல் நாள் மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, தமிழ் பேசும் மக்களைக் கொண்ட தமிழர் தாயகமாக சென்னை மாகாணம் மறு சீரமைப்புச் செய்யப்பட்டது. சென்னை மாகாணத்தில் இடம் பெற்றிருந்த தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அந்தந்த மொழி மாநிலங்களுடன் இணைக்கப்பட்டன. சென்னை மாகாணம் தமிழ்மொழி பேசும் மக்கள் கொண்டதாக சீரமைக்கப்பட்டது.

மொழிவாரி மாநிலப் பிரிவினையின்போது தெற்கு எல்லையில் குமரியும், வடக்கு எல்லையில் திருத்தணியும் தமிழகத்தோடு இணைத்தது வரலாறு. இதற்காக பல தலைவர்கள் உயிர் தியாகம் செய்துள்ளனர். இதை கொண்டாடும் விதமாக இன்று கடைபிடிக்கப்படும் தமிழ்நாடு நாள் ஒட்டி தலைமை செயலகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ் மொழி எனும் உன்னத செல்வத்தை வளர்த்தெடுப்பதற்காக தொடர்ந்து பாடுபடப்போவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு நாள் விழாவையொட்டி அறிக்கை வெளியிட்டுள்ள அவர், உலகத் தமிழர்கள் அனைவருக்கும் வாழ்த்து கூறியுள்ளார். மேலும் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய இளம்பூரணர்  'நம் நாடு யாது என்றால் தமிழ்நாடு என்றல்‘ எனும் வாக்கியத்தைப் பயன்படுத்தி உள்ளதை முதல்வர் சுட்டிக் காட்டி உள்ளார்.