கோவை பெரியார் நூலகத்திற்கான ₹300 கோடி புத்தகக் கொள்முதலில் போலி பதிப்பகங்கள் மற்றும் AI மூலம் தரமற்ற நூல்கள் வாங்கப்பட்டதாக குற்றச்சாட்டு. கல்வி அமைச்சர் ராஜ்மோகன், தவறு செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவேன் என உறுதி அளித்தார்.
செய்தியாளர் - M.மீரா
கோவையில் ₹300 கோடி செலவில் கட்டப்பட்ட பெரியார் அறிவுலக நூலகத்திற்கான புத்தகக் கொள்முதலில் பல கோடிகள் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் இந்த ஊழலை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார். நூலகத்திற்காகப் போலிப் பதிப்பகங்கள் மற்றும் போலி ஐஎஸ்பிஎன் (ISBN) எண்களுடன், செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி எழுதப்பட்ட தரமற்ற நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், ₹300 மதிப்புள்ள புத்தகங்கள் ₹1,500 வரை அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் வரலாறு மற்றும் இலக்கியத் தகவல்கள் தவறாக இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் பொது நூலகங்களுக்கான புத்தகக் கொள்முதலில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்துள்ள புகார்கள் குறித்து செய்தியாளர்களை சந்தித்த கல்வி அமைச்சர் ராஜ்மோகன், தவறு செய்தோரை சட்டத்தின் முன் நிறுத்துவேன் என்று உறுதி அளித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் அரசியல்வாதிகள், அதிகாரிகள் என யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். சென்னை கன்னிமாரா நூலகத்திற்கு திமுக ஆட்சியில் அகல்விளக்கு பதிப்பகத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட போலி புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளது. கூட்டு சதி செய்து புத்தக கொள்முதலில் ஊழல் செய்துள்ளனர். கோவை பெரியார் நூலகத்திற்கு வாங்கிய போலி புத்தகங்களின் எண்ணிக்கை 3000த்தை தாண்டும் என்றும் குறிப்பிட்டார். போலி புத்தகங்களை உருவாக்கிய அகல்விளக்கு பதிப்பக உரிமையாளரையும் விசாரிக்க உள்ளதாகவும் அமைச்சர் ராஜ் மோகன் கூறியுள்ளார்.