karukka vinoth
karukka vinoth PT
தமிழ்நாடு

“பாஜகவில் என்னைக் கேட்டு சேர்க்கவில்லை” - கருக்கா வினோத்தை பிணையில் எடுத்த வழக்கறிஞர் பரபரப்பு தகவல்

Angeshwar G

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசியதாக கருக்கா வினோத் என்ற ரவுடி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். கைதான கருக்கா வினோத் மீது 5 பிரிவுகளில் காவல் துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். காவல் துறையினரின் முதல்கட்ட தகவல் அறிக்கையில், ரவுடி வினோத் வீசிய பெட்ரோல் குண்டு அதிக சத்தத்துடன் எரிந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குண்டுவீசி விட்டு தப்பி ஓடும் சமயத்தில் பிடிப்பதற்காக விரட்டிய போது, ரவுடி வினோத், காவல் துறையினர் மீது மற்றொரு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகவும் காவல்துறை எப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதான ரவுடி வினோத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

அமைச்சர் ரகுபதி

இந்நிலையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கருக்கா வினோத்தை பிணையில் எடுத்த வழக்கறிஞர் (முத்தமிழ் செல்வக்குமார்) பாஜகவில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது என தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வழக்கறிஞர் முத்தமிழ் செல்வக்குமாரை புதிய தலைமுறை சார்பாக தொடர்பு கொண்டபோது அவர் கூறியன, “கருக்கா வினோத் சிறையில் இருக்கும் விசாரணைக் கைதி. என்னை பாஜகவில் என்னைக் கேட்டு சேர்க்கவில்லை. 2020 ஆம் ஆண்டு கோட்டூர் ராகவன் என்பவர் என்னை சேர்த்துள்ளதாக தகவல் கிடைத்தது. அதன் பின் அவரை தொடர்பு கொண்டு பாஜகவில் இணையவில்லை என தெளிவுபடுத்திவிட்டேன். வழக்கறிஞராக அனைத்து கட்சிகளுக்கும் வழக்கு நடத்தியுள்ளேன்.

கருக்கா வினோத் என்னுடைய ஜூனியரின் க்ளைண்ட். ஜூனியர் வழக்கை தாக்கல் செய்துவிட்டார். அவர் என்னை அணுகினார். நாங்கள் அவருக்கு பெயில் எடுத்துக் கொடுத்தோம். காவல் துறையினர் இது குறித்து விசாரித்தார்கள். அவர்களிடம் தேவையான தகவல்களை எல்லாம் கொடுத்துவிட்டேன். அவர்கள் கேட்ட ஆவணங்களை எல்லாம் கொடுத்துவிட்டேன்.

அமைச்சர் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். அதற்கு தேவையான விளக்கத்தை தெரிவித்து விடலாம். எனக்கு அரசு மீதும் காவல்துறையின் மீதும் மிகப்பெரிய மரியாதை உள்ளது. அவர்களுக்கு முழுக்க ஒத்துழைப்பு கொடுப்போம்” என தெரிவித்துள்ளார்.